Published on 06/07/2019 | Edited on 06/07/2019
பரதன்... தமிழ் சினிமாவின் கமர்சியல் படங்களுக்கு புதிய பாதையை அமைத்த 'தில்' படத்தின் வசனகர்த்தா, ஸ்க்ரிப்டிலும் இயக்குனர் தரணியுடன் இணைந்து பணியாற்றியவர். இவர்கள் உருவாக்கிய 'தில்' படத்திற்கு பிறகு, அதே டெம்ப்லேட்டில் ஒரு ஐம்பது படங்களாவது வந்திருக்கும். தொடர்ந்து 'தூள்', 'கில்லி' என பெரிய வெற்றிகளை பெற்ற கூட்டணியில் இருந்து பிறகு தனியாக 'அழகிய தமிழ்மகன்', 'அதிதி', பைரவா' உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர். விஜய்க்கு பல படங்களில் பன்ச் எழுதிய இவரது பேனா அஜித்திற்கும் அசத்தலாகவே எழுதியது. 'வீரம்' படத்தில் இவர் எழுதிய ஒவ்வொரு வசனமும் அஜித் ரசிகர்களுக்கு பாடம், மனப்பாடம். அவருடன் நாம் நடத்திய நீண்ட உரையாடலின் ஒரு பகுதியில் 'வீரம்' படங்களின் வசனங்கள் உருவான விதம் குறித்து கூறினார்...
"அஜித் சார் நடிக்கும் வீரம் படத்தில் பணிபுரிய நண்பர் சிவா அழைத்தார். என் பார்வையில் படத்தின் கதைக்கு வழு சேர்க்கும் விதமாக எப்படியெல்லாம் வசனங்கள் வைக்கலாம் என்று யோசித்து, அஜித் சாருக்கு இருக்கும் மாஸ், அதற்கு முன்பு அஜித் சார் நடித்த படங்கள், அதில் அவருக்கு வசனங்கள் எழுதப்பட்ட விதம், படத்தின் டைட்டில் 'வீரம்' என எல்லாவற்றையும் யோசித்து மனதில் கொண்டு பணியாற்றினேன். ஒரு நாள் காலையிலிருந்து மாலை வரை நானும் சிவாவும் கதை, காட்சிகளெல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டு மாலையில் ஒரு சீனுக்கு நான் எழுதத் தொடங்கினேன். அஜித் சார் அண்ணன், நாலு தம்பிகள், அவர்களோடு தன்னிடம் வேலை செய்யும் அப்புக்குட்டியையும் தம்பியா கருதுறார். அந்த அப்புக்குட்டியின் கல்யாணத்துக்கு வரும் அஜித், அங்கு செய்யும் ஒரு செயலைப் பார்த்து தமன்னாவிற்கு அஜித்தின் மேல் காதல் வரவேண்டும். இதுதான் சீன். இதை எழுதும்படி என்னிடம் சொல்லிவிட்டு சிவா சென்றுவிட்டார்.
நான் இதை ஒரு நல்ல சீனா கொண்டுவரணுமென்று யோசித்து எழுதத் தொடங்கினேன். வேலை செய்ற ஒருத்தருக்கு பணமோ நகையோ கொடுக்குறது வழக்கமான ஒன்னு. ஒரு டாகுமெண்ட் கொடுக்குற மாதிரி வச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சு, அப்புக்குட்டி கல்யாணத்துக்கு வரும் அஜித், புதுமணத்தம்பதி அவர் காலில் விழுந்து ஆசி வாங்கும்போது அவருக்கு கல்யாணப்பரிசாக ஒரு டாக்குமெண்டை கையில் கொடுப்பதுபோல வச்சேன். "இது என்னன்னே?"னு அப்புக்குட்டி கேட்பார். "இதுவரைக்கும் நீ தொழிலாளி, இனிமேல் நீ முதலாளிடா. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்ல உன் பேருக்கு ஒரு கடை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கேன்" என்று சொல்வார் அஜித். "டே தம்பி... டே தம்பினு நீ கூப்பிடும்போதெல்லாம் உதட்டிலிருந்து கூப்பிடுறன்னு நெனச்சேன். இப்போதான் தெரியுது நீ மனசுல இருந்து கூப்பிட்டு இருக்க" என்று சொல்லி நெகிழ்வார் அப்புக்குட்டி. அவர் போனதும் அஜித்தின் தம்பி, "என்ன அண்ணே" என்று கேட்க, அஜித் சொல்வார், "நமக்கு கீழ இருக்கவங்கள நம்ம வாழவச்சா மேல இருக்கவன் நம்ம வாழ வைப்பான்"னு. தமன்னாவும் தனக்குக் கீழ வேலை பார்க்கும் ஒருத்தனுக்கு முழு வாழ்வாதாரத்தையும் அமைச்சுக் கொடுக்குற அந்த மனசை பார்த்து லவ் பண்ணுவாங்க.
இப்படி அந்த சீனை எழுதி சிவா சார்கிட்ட சொன்னபோது, அவர் என்னிடம் தன் கையை காட்டினார். 'சார் சிலிர்த்துருச்சு சார்'னு சொன்னார். தியேட்டரிலும் அந்த வசனத்துக்கு அதே ரெஸ்பான்ஸ் இருந்தது. அஜித் சார் அதை பேசும்போது இன்னும் பொருத்தமாக இருந்தது, ரசிக்கப்பட்டது. அது உண்மைதான், இன்னைக்கு பெரிய, வெற்றிகரமான தொழிலதிபர்களா இருக்கக்கூடிய யாரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் தங்கள் தொழிலாளர்களை நல்லா வச்சிருப்பாங்க. அப்போதான் அவங்க உயர முடியும்.
சிவா சாரே ஒரு நல்ல வசனகர்த்தாதான். வீரம் படத்தில் அவர் எழுதிய பல வசனங்கள் இருக்கு. இந்தப் படம் எழுதிவிட்டு நான் 'அதிதி' என்ற படத்தை இயக்கச் சென்றுவிட்டதால் அஜித் சாரை அதிகம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிவா சார்கிட்டயும் சொல்லியிருந்தேன் என்னால ஷூட்டிங் வர முடியாதுன்னு. சென்னையில் வீரம் ஷூட்டிங் நடந்தபோது ஒரே ஒரு முறை போயிருந்தேன். அப்போ, சிவா சார் அறிமுகம் செஞ்சு அஞ்சு நிமிஷம் மட்டும் பேசினோம். 'படம் நல்லா வந்துக்கிட்டு இருக்கு'னு அஜித் சார் சொன்னார். மற்றபடி அவருக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்படவில்லை".