பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் பஞ்சமில்லாத தமிழகத்தில் தற்போது வரை சூப்பர் ஸ்டார் முதல் உலகநாயகன் வரை திரையுலகை சேர்ந்த பலரும் அரசியலில் குதித்து வருகின்றனர். இந்த வரிசையில் இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித், விஜய் பெயர்களும் அவ்வப்போது ரசிகர்களால் அரசியலில் அடிபட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை ரசிகர்கள் சார்பாக நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப்போவதாக 'தின விஜய்' இதழின் போஸ்டர் ஒன்று வெளியானது. அதில்... "நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22 அன்று அவர் முக்கிய முடிவு எடுக்கிறார் ஜோசப் விஜய் என்றும், தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் என்றும், மேலும் தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம். தமிழக மக்கள் மகிழ்ச்சி. அரசியல் கட்சிகள் அதிர்ச்சி. விவசாயிகள் வரவேற்பு. திரையுலகினர் வாழ்த்து" என்று அச்சிட்ட போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாள் நெருங்கி வருவதால் தற்போது மீண்டும் மதுரை விஜய் ரசிகர்கள் விஜய் அரசியல் குறித்த சர்ச்சை போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில்... "தமிழர்களின் போராட்டம் தொடர்கதை.. எங்கள் தளபதி மாற்றிடுவார் அதை, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே, தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு, மக்கள் நலன் காக்க, மக்கள் குறை தீர்க்க, நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வரே, என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு முறை மட்டுமல்ல இதற்கு முன்பும் மதுரை விஜய் ரசிகர்கள் விஜயின் அரசியல் குறித்த போஸ்டர்களை ஊர் முழுவதும் ஓட்டிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய் ஏற்கனவே 'நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்' என்று கூறியதில் ஆரம்பித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தூத்துக்குடி, ஈரோடு என மக்கள் இயக்க கூட்டங்களை மும்முரமாக நடத்தி வந்தார். ஆனால் சமீபமாக இது சார்ந்து செயல்பாடுகள் பெரிதாக இல்லாததால் சோர்வடைந்திருக்கும் ரசிகர்கள் அவ்வப்போது இது போன்ற போஸ்டர்களை ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.