53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டி பிரிவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு திரையிடப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விழாவில் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியுள்ளது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களும் ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.