Skip to main content

வெற்றிமாறனை விடாமல் துரத்தும் வடசென்னை பிரச்சனை!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

கடந்த மாதம் வெளிவந்த 'வடசென்னை' திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், 'டேனியல்' பாலாஜி, கிஷோர், பவன் என பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தது.

 

vadachennai vetrimaran



வடசென்னை வாழ்க்கை முறையை உண்மைக்கு நெருக்கமாகப் படமாகியிருப்பதாக பெரும்பாலானோர் பாராட்டிய நிலையில், வடசென்னையைச் சேர்ந்த பலர் படத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். படத்தில் இடம்பெற்ற வசைச்சொற்கள் குறித்தும், வாழ்க்கை முறை குறித்தும் விமர்சித்துப் பேசிய அவர்கள், 'வடசென்னை எவ்வளவோ மாறி, முன்னேறி இருக்கும் நிலையில் இதுபோன்ற படங்கள் வடசென்னை மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன' என்று கூறினர். மேலும், படத்தில் அமீர் - ஆண்ட்ரியா இருவரும் ஒரு படகில் நெருக்கமாக இருப்பது போல அமைந்திருந்த காட்சி, படகை தெய்வமாக மதிக்கும்  மீனவர்கள் மனதை புண்படுத்தியதாகக் கூறி, மீனவர் சங்கமொன்று வெற்றிமாறனுக்கு தன் கண்டணத்தைத் தெரிவித்தது. வடசென்னையைச் சேர்ந்த திரைத்துறையினர் சிலரும் கூட தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்த மீனவர் சங்க நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசிய வெற்றிமாறன், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த எதிர்ப்புகளுக்குப் பின்னால் திரைத்துறையினர் சிலர் இருப்பதாகவும் செய்தி வந்தது.

இப்படி, வரவேற்பும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கலந்து வடசென்னை அலை ஓய்ந்தது. அதன் இரண்டாம் பாகம், 'ராஜன் வகையறா' என்ற வெப்சிரீஸ் இப்படி வடசென்னையைத் தொடர்ந்த பல திட்டங்களைப் பற்றி முன்பு பேசிய வெற்றிமாறன், இந்தப் பிரச்சனைகளைத் தொடர்ந்து அவற்றை சற்றே கிடப்பில் போட்டார். கடந்த சனிக்கிழமையன்று இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'கூகை' திரைப்பட இயக்கம் ஒருங்கிணைத்த வடசென்னை படம் குறித்தான கலந்துரையாடல் நடந்தது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் கரண் கார்க்கி, பத்திரிகையாளர் சுகுணா திவாகர், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோருடன் பல உதவி இயக்குனர்களும் திரைப்பட ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் படத்தின் நேர்மறை எதிர்மறை விஷயங்கள் பேசப்பட்டு பின் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு வெற்றிமாறன் பதிலளித்தார். 

 

vadachennai

 

அப்போது ஒருவர், "இன்னும் எத்தனை படங்களில் வடசென்னையை மோசமாகவே சித்தரிக்கப்போகிறீர்கள்? நான் வடசென்னையில் பிறந்து படித்து ITயில் பணிபுரிந்தவன்" என்று கேட்க, "நான் இது எதையும் மறுக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலேயே 'இது வடசென்னையின் ஒரு பகுதிதான்' என்று கார்டு போட்டு மன்னிப்புக் கேட்டேன். மீனவ சமூகத்தின் மனம் காயப்பட்டது என்று கூறியதால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டேன். மற்றபடி மாரல் போலீசிங் செய்பவர்கள் பற்றி கவலையில்லை" என்று அந்தக் கேள்விக்கு வெற்றிமாறன் விளக்கமளிக்க, உடனே இன்னொருவர் எழுந்து, "அது எப்படி சார் தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேப்பீங்க? நீங்க வடசென்னை2 லாம் எடுக்க வேணாம். தேவையேயில்லை... உங்களால எங்க வாழ்க்கையை சொல்ல முடியாது.." என்று வெற்றிமாறனை விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் சற்று அதிர்ச்சியடைந்த வெற்றிமாறன் அதற்கு பதிலளிக்க முயல, அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். மற்றவர்கள், 'அவரை பதில் சொல்ல விடுங்க" என்று கேள்வி கேட்டவரை தொடர்ந்து கேட்டும் பிடிவாதமாகத் தொடர்ந்தார். இதனால் தர்மசங்கடம் அடைந்த வெற்றிமாறன், "இது ஜனநாயகமே இல்ல, நீங்க அப்படி சொல்லக்கூடாது" என்று கூறினார். இருந்தும், தொடர்ந்து அந்த நபர் பேசிக்கொண்டே செல்ல, சற்று நேரம் சலசலப்பு தொடர்ந்தது. கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர், "இது உதவி இயக்குநர்களுக்கான கூட்டம், இதில் நீங்கள் கலந்துகொண்டதே தவறு, மேலும் இப்படி பேசுவது தவறு" என்று அவரை நோக்கிக் கூறியும் தொடர்ந்து பேசினார் வந்தவர். 

சற்று நேரத்துக்குப் பிறகு அடுத்த கேள்விக்கு நகர்ந்தது கலந்துரையாடல். சில நாட்களுக்கு முன், நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு 96 படத்தின் கலந்துரையாடல் கூட்டம் இங்கு நடந்தது. அப்போது ஒருவர், விஜய் சேதுபதியின் 'சங்குத்தேவன்' குறித்து கேள்வியெழுப்ப விஜய் சேதுபதி அதற்கு, காரமாக பதிலளித்தார். தொடர்ந்து திரைப்படங்கள் குறித்த விவாதங்களை பிரபலங்களுடன் ஏற்பாடு செய்கிறது பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம்.                           

சார்ந்த செய்திகள்