திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். பின்பு அவரிடம் வட சென்னை 2, விடுதலை 2 என அவரது அடுத்த படங்களின் அப்டேட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர் வட சென்னை 2 பற்றிப் பேசுகையில், "வடசென்னை 2 கண்டிப்பா வரும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்குள் வேறொரு 2 கமிட்மென்ட் இருக்கிறது. அதை முடித்தவுடன் வடசென்னை 2 தொடங்கும்" என்றார்.
விடுதலை 2 மற்றும் இப்படம் அமைந்தது குறித்துப் பேசிய அவர், "அசுரன் சமயத்திலே சூரியுடன் தான் அடுத்த படம் எடுப்பதாக முடிவு செய்துவிட்டேன். இது குறித்து அவரிடமும் பேசிவிட்டேன். அஜ்னபி என்ற ஒரு நாவல், இங்கயிருந்து போய் கல்ஃப் நாட்டில் வேலை பார்க்கிறவர்கள் பற்றிய வாழ்க்கை கதை. அதை படமாக்கத்தான் முயற்சி செய்தேன். பின்பு லொகேஷனும் பார்த்து முடித்துவிட்டேன். அதன் பிறகு லாக்டவுன் வந்ததால் தொடர முடியவில்லை. அதன்பிறகு வேறொரு ஸ்க்ரிப்ட் பண்ணேன். அதுவும் தொடங்க முடியவில்லை. இதையடுத்து ஜெயமோகனின் கைதிகள் என்ற கதையை படித்து அதை படம் எடுக்க ஆசைப்பட்டேன். அதற்கான பணிகளை ஆரம்பித்த போதுதான் புத்தகத்துக்கான உரிமத்தை வேறொரு நபருக்கு ஜெயமோகன் கொடுத்துவிட்டார் என்பது தெரியவந்தது. அதுதான் ரத்தசாட்சி என்ற தலைப்பில் வெளியானது. இதன்பிறகு தான் துணைவன் கதையை தழுவி விடுதலை படத்தை தொடங்கினேன்" என்றார்.