ஆந்திர சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்து பின்னர் தனது ஆளுமையான தோற்றத்தினால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி என்று பல படங்களில் ராணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் ராணியாக மாறியவர்.
![anushka](http://image.nakkheeran.in/cdn/farfuture/sZNpggx-F9dTVLES7bEtaxzWcHhT2-IXWtSyO_xBs2Q/1582285792/sites/default/files/inline-images/anushka_3.jpg)
இவர் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அனுஷ்கா தொழிலதிபரை காதலிக்கிறார், டாக்டரை காதலிக்கிறார், தன்னுடை சக நடிகர்களுடன் காதலில் இருக்கிறார் என்று பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஒருசில செய்திகள் அவர் மறைமுகமாக திருமணமே செய்துவிட்டார் என்றெல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதாகி இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதலில் இருக்கிறார் என்றும் விரைவில் அவருடன் திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியுள்ள அனுஷ்கா, “காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. பல தடவை எனக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். ஒரு தொழில் அதிபரை காதலிக்கிறேன் என்றனர். டாக்டரை விரும்புவதாக கூறினார்கள். அதன்பிறகு என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து பேசினார்கள்.
இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்கின்றனர். எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்ற வருத்தம் ஏற்படுகிறது. ஆனாலும் நடிகைகள் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவது சகஜம்தான். எனது திருமண முடிவை பெற்றோர்களிடம் விட்டுவிட்டேன். அவர்கள் யாரை பார்த்து கையை காட்டுகிறார்களோ அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன்” என்றார்.