![Venkat Prabhu](http://image.nakkheeran.in/cdn/farfuture/k48xPvhIzMCUkzz13cc0SQnO0_zjEruGJmlavERD2oM/1647955208/sites/default/files/inline-images/176_5.jpg)
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சமூக வலைதளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்மத லீலை படம் ஏன் எடுத்தேன் என இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கட் பிரபு, “லாக் டவுண் சமயத்தில்தான் இந்த மாதிரி ஒரு படம் பண்ணலாம் என்று முடிவெடுத்தோம். அந்த சமயத்தில் சீரியசான படங்கள் நிறைய வந்துகொண்டிருந்தன. நெருக்கமானவர்கள் நிறைய பேரை நாம் இழந்துகொண்டிருந்தோம். அப்படிப்பட்ட நேரத்தில் சோகமான படத்தை நாமும் எடுக்க வெண்டாம் என்று நினைத்து மன்மத லீலை படத்தை ஆரம்பித்தோம். இந்தப் படத்தின் கதை என்னுடைய உதவி இயக்குநர் மணிவன்னனுடையது.
இந்தப் படத்தை சமூக வலைதளங்களில் நிறைய பேர் விமர்சித்திருந்தனர். அடல்ட் காமெடி என்ற ஜானரில் நிறைய படங்கள் வராததே இதற்கு காரணம் என நினைக்கிறேன். அடல்ட் காமெடி என்றாலே முகம் சுழிக்கும் வகையிலான காமெடி என்று நினைகிறார்கள். அந்தக் காலத்திலேயே அடல்ட் காமெடி ஜானரில் பாக்யராஜ் சார் படம் பண்ணியிருக்கிறார். நான் மன்மத லீலை படம் பண்ணுவதற்கு அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இலைமறை காயாய் அவர் பண்ணியதை நான் இந்தக் காலத்திற்கு ஏற்ற மாதிரி பண்ணியிருக்கிறேன். அமெரிக்கன் பை, செக்ஸ் எஜுக்கேஷன் சீரிஸையெல்லாம் அப்படியே நாம் இங்கு எடுக்க முடியாது. முகம் சுழிப்பதுபோல படத்தில் எந்தக் காட்சியும் இருக்காது. அனைவரும் ரசிக்கக்கூடிய வகையிலான ஜாலியான படமாக மன்மத லீலை இருக்கும்” எனத் தெரிவித்தார்.