நடிகர், அரசியல்வாதி என்று பன்முக அடையாளம் கொண்ட ராதாரவி அவர்கள், தான் ஏற்று நடித்த பல்வேறு கதாபாத்திரங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
'குரு சிஷ்யன்' முத்துராஜ்
குரு சிஷ்யன் ரஜினி சாரின் படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கம். அவருடைய உதவி இயக்குநர்கள் கெட்டப் மற்றும் மேக்கப் தொடர்பான விஷயங்களை என்னிடம் விட்டுவிடுவார்கள். அந்த கேரக்டர் சில நேரங்களில் காமெடி, சில நேரங்களில் வில்லன் என்று மாறி மாறிப் பயணிக்கும் ஒன்று. 'ராஜாதி ராஜா' படத்தில் அம்மாஞ்சி வில்லனாக நடித்திருந்தேன். அதுபோன்ற கேரக்டரில் குரு சிஷ்யன் படத்திலும் காமெடி கலந்து நடித்திருந்தேன்.
'முத்து' அம்பலத்தான்
ரஜினி சார் என்னை அழைத்து முத்து படத்தில் இந்த கேரக்டர் இருக்கிறது, அதை நான் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்தப் படத்தில் என்னை அறையும் காட்சி ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்றார். இந்த ரோலுக்காக என்னுடைய கெட்டப்பை நானே பார்த்துப் பார்த்து உருவாக்கினேன். ரவிக்குமார் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில கேரக்டர்கள் ரஜினி சார் செய்யும்போதுதான் சூப்பராக அமையும். நம்முடைய கேரக்டரை நாம் மெருகேற்ற அவர் முழுமையாக அனுமதிப்பார். வயசானாலும் இன்றும் ரஜினி அதே அழகு தான்.
'ஜில் ஜங் ஜக்' ரோலக்ஸ் ராவுத்தர்
அந்தப் படத்தில் புதிதான ஒரு கெட்டப்பில் தோன்றினேன். சித்தார்த் தான் என்னை 'Shoot the Kuruvi' பாடலில் வெறும் டயலாக் மட்டும் பேசச் சொல்லி ஊக்கப்படுத்தினார். அது வெற்றி பெற்றதற்கான பெருமை சித்தார்த்தையே சாரும்.
'அண்ணாமலை' கங்காதரன்
சரத்பாபு என்னை விட வயதில் மூத்தவர். அவருக்கு அப்பாவாக அந்தப் படத்தில் நடித்தேன். முதலில் அந்தப் படத்தில் கோட் சூட் போட்டு நடிக்கச் சொன்னார்கள். நான் அதை மாற்றி படத்தில் நீங்கள் பார்க்கும் கெட்டப்பை கொண்டுவந்தேன். என் கெட்டப்பை பார்த்து வியந்த ரஜினி சார், பாலச்சந்தர் சாரை செட்டுக்கு அழைத்தார். அவரும் என்னை வெகுவாகப் பாராட்டினார். பணத்தாசை பிடித்த கேரக்டர் என்பதால் "கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்கு சரியா வரும்" என்கிற வசனத்தைச் சேர்த்தேன். அந்த வசனம் இன்று வரை மிகப்பெரிய ஹிட்.