அறிமுக இயக்குநர் காளிமுத்து இயக்கத்தில் ராகுல், சஞ்சனா சிங், வின்செண்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டக்காரி’. ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.கே.ராம்ஜி இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு வைரமுத்து எழுதிய நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், “தலைப்பு என்பது எங்களுக்கு புதிதல்ல. நான் எழுதிய முதல் பாட்டு பொன்மாலை பொழுது, ஒரு படத்துக்கு தலைப்பானது. புதுக் கவிதைக்கு நான் எழுதிய பாட்டு, வெள்ளை புறா ஒன்று, அது ஒரு படத்துக்கு தலைப்பானது. என் பல்லவி, பூவே பூச்சூடவா என்பதும் தலைப்பானது. இப்போதுதான் தெரிந்து கொண்டேன், திருப்பாச்சி என்பது கூட என் பாட்டில் இருந்து வந்த தலைப்பு என்று. இப்படி எத்தனைப் பேர் என்னை ரகசியமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறியமாட்டேன்.
நீ தானே என் பொன் வசந்தம் என் பாட்டு தலைப்பு, விண்ணைத்தாண்டி வருவாயா என் பாட்டு தலைப்பு, இவர்கள் யாரும் வைரமுத்துவை பார்த்தோ, தொலைபேசியில் கேட்டோ இந்தத் தலைப்பை பயன்படுத்தியதில்லை. அத்தனைப் பேரும் வைரமுத்து நமக்கானவன், தமிழ் நமக்கானது, ஏன் கேட்க வேண்டும் என்ற உரிமையில் எடுத்துக் கொள்கிறார்கள். நானும் கேட்பதில்லை. நீங்கள் கேட்பதில்லையா? எனச் சில பேர் கேட்டார்கள். ஜெயகாந்தன் பதிலை சொன்னேன், ஏன் கேட்க வேண்டும்? இல்லாதவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்” என்றார்.