![Udhayanidhi Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/pFJkCoOLOnZFwO7-y57sM1wBA05wSOET8st5uuuOuTU/1646479559/sites/default/files/inline-images/124_13.jpg)
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகரும் திமுக எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "என்னுடைய மாமன்னன் படத்தின் படப்பிடிப்பை இன்றுதான் பூஜையுடன் தொடங்கினோம். மாரிசெல்வராஜ் சாரிடம் அனுமதி வாங்கிவிட்டு முதல்நாளே ஷூட்டிங்கை கட் அடித்துவிட்டு இங்கு வந்துள்ளேன். ராதே ஷ்யாம் படத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பே வம்சி எனக்கு திரையிட்டு காண்பித்தார். மொத்தம் மூன்றே கால் மணிநேரம் படம் ஓடியது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பார்த்தேன். ஐரோப்பாவிற்கு நான் சென்றிருந்தாலும்கூட ஒவ்வொரு காட்சியிலும் இது எந்த இடம், இந்த இடம் எங்கிருக்கிறது என்று கேட்டுக்கொண்டே பார்த்தேன். பாகுபலிக்கு முன்பிருந்தே பிரபாஸ் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். எல்லா படங்களிலும் பறந்து பறந்து அடிப்பார். இந்தப் படத்தில் பறந்து பறந்து காதல் செய்திருக்கிறார். படத்தில் ஆக்ஷனே இல்லாமல் இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டே பார்த்தேன். கடைசி அரைமணிநேரம் கடலில் ஒரு சண்டைக்காட்சி உள்ளது. மிக அற்புதமாக அதை எடுத்துள்ளார்கள். மொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனப் பேசினார்.