![tolet](http://image.nakkheeran.in/cdn/farfuture/GobXiVrheqlr_1j_ZifEB_jyc0Pc6iNn-oZ6_wOyUEs/1550756280/sites/default/files/inline-images/tolet-1.jpg)
தமிழ் திரையுலகில் வெகுகாலமாக பெரிய, பொழுதுபோக்குப் படங்களோடு போட்டி போட முடியாமல் தவித்த, வியாபார நோக்கமற்ற படங்களுக்கு சமீபமாக கைகொடுத்து வரும் முறை ஒன்று இருக்கிறது. படத்தை எடுத்து நேரடியாக திரையரங்குகளுக்குக் கொண்டு வராமல், உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி, அங்கு அந்த படங்கள் பெறும் அங்கீகாரங்களை, படத்தின் விளம்பரத்திற்குப் பயன்படுத்துவது தான் அந்த முறை. பல படங்களுக்கு, உலக திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் பரிசுத்தொகைகள் தான் வருமானமாகவே இருக்கின்றன. ஆரண்யகாண்டம், காக்கா முட்டை, விசாரணை, லென்ஸ், ஒரு கிடாயின் கருணை மனு, அருவி என்று பல படங்கள் இந்த வழியில், சிறந்த படங்களுக்கான விருதுகளை திரைப்பட விழாக்களில் பெற்று வந்திருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் பரிசு பெறுவது நமக்குப் பழகிய செய்தியாகிவிட்ட நிலையில், கடந்த ஆண்டு லண்டன் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சிறந்த நடிகருக்கான முதல் கட்ட தேர்வில் ஒரு தமிழ் நடிகரும் இடம் பெற்றார். அவர் சந்தோஷ் நம்பிராஜன், படம் டுலெட். ஒளிப்பதிவாளரான சந்தோஷ் திடீரென்று நடிகராகியுள்ளார்.
ஒளிப்பதிவிலிருந்து நடிப்பு... முதல் படத்திலேயே உலக அங்கீகாரம் பெரும் வாய்ப்பு... எப்படி இது?
போன வருஷம் வரை நான் நடிப்பேன் என்பது எனக்கே தெரியாது. நான் சிங்கப்பூரிலிருந்த போது திடீரென்று ஃபோன் செய்த செழியன் சார், 'ஒரு படம் பண்ணப் போறேன், நீதான் நடிக்கிற' என்று கூப்பிட்டார். உடனே கெளம்பி வந்துட்டேன். வந்ததுக்கு அப்புறம்தான் தெரியும், நான்தான் ஹீரோனு... 'என்ன சார்?'னு கேட்டப்போ, 'இந்த கதாபாத்திரத்துக்கு உன் முகமும், உன் கண்ணும் தேவை. நீதான் இதை செய்ய வேண்டு'மென்று சொன்னார். அவர் என் அண்ணன் மாதிரி. அவர் சொன்னதை செய்தேன்.
கேமராவுக்குப் பின்னாடியிருந்து முன்னாடி வந்த அனுபவம்...?
'கல்லூரி'யில் ஆரம்பித்து செழியன் சார் கூட சில படங்கள் அசிஸ்டண்டாகவும், கருப்பம்பட்டி, கத்துக்குட்டி படங்களில் ஒளிப்பதிவாளராகவும் வேலை செய்திருந்தாலும் ஒரு சீன்ல கூட கேமரா முன்னாடி வந்ததில்லை. அந்த எண்ணமே இருந்ததில்லை. 'நீயா மட்டும் இரு'னு சொல்லி சார் கூப்பிட்டதால வந்தேன். ஒரு சின்ன பையனுக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். ஷாட்டுக்கு முன்னாடி வரைக்கும் 'அங்கிள்'னு கூப்பிட்டுட்டு, ஷாட்ல 'அப்பா'னு கூப்பிடணும் அவன். படத்தில் அப்பா-மகன் நெருக்கம் தெரிய வேண்டுமென்பதற்காக ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றினோம். இப்படி, நடிப்பு எனக்கு சவாலாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இனி வாய்ப்பு வந்தால் நடிக்கலாம்னு தான் தோனுது.
டுலெட் - சென்னையில் வாடகை வீடு பிரச்சனை பற்றிய கதையா?
ஹா...ஹா... எளிதில் கணிக்கக் கூடிய வகையில் தான் டைட்டில் வச்சிருக்கார். ஆனால், அந்த பிரச்சனையை பேசியிருக்கும் விஷயமும், கோணமும் வேறு. லட்சக்கணக்கான வெளியூர் மக்களுக்கு வாழ்வளிக்கும் சென்னையில் இன்னும் எத்தனையோ பேர் தங்க வசதியில்லாமல் 'சென்னைக்கு மிக அருகில்' என்று ரியல் எஸ்டேட்காரர்களால் சொல்லப்படும் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து போகிறார்கள். அது சம்மந்தமான ஒரு கதையைத் தான் பேசியிருக்கிறார் செழியன் சார். பின்னணி இசை, பாடல்கள் உள்பட வணிக திரைப்படங்களுக்கான எந்த அம்சமும் இல்லாத மிக இயல்பான படமா இதை உருவாக்கியிருக்கார்.
பின்னணி இசையும் இல்லையா?
ஆமா... செழியன் சார் இத்தனைக்கும் ஒரு மியூசிக் ஸ்கூல் நடத்துகிறார். அவர் இயக்கும் படத்தில் இசையே கிடையாது. இயற்கையான சத்தங்களைப் பயன்படுத்தியிருக்கோம். பொதுவா ஒளிப்பதிவாளர்கள் இயக்கும் படங்களில் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அழகா வைப்பாங்க. ஆனா, அப்படி தன்னை முன்னிலைப்படுத்தி காட்டாம, படத்துக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். உலக சினிமா பற்றி எழுதுவது, இசைப் பள்ளி, இப்படி சினிமாவைச் சுற்றி எப்பொழுதும் செயல்படுபவர். இந்தப் படத்தில் எந்த மாற்றமும் தலையீடும் இருக்கக் கூடாது என்றுதான் மிகவும் சிரமப்பட்டு அவரே தயாரிக்கிறார். இத்தனை வருடங்களில், ரொம்ப தேர்ந்தெடுத்து தான் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.
![tolet](http://image.nakkheeran.in/cdn/farfuture/kwVZljin5Fbk68UenG4MbdMZeiKmmF2X-WHlbMGBPmY/1550756322/sites/default/files/inline-images/tolet_0.jpg)
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகரென்று போற்றப்பட்ட சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்றோரை 'ஓவர் ஆக்சன்' என்றும் 'கெட்-அப் சேஞ்' மட்டும் தான் என்றும் சமூக வலைதளங்களில் உலக சினிமா ஆர்வலர்கள் சிலர் விமர்சிக்குறாங்களே?
நான் ஆரம்ப நிலை நடிகன்தான். என்னைப் பொறுத்தவரை, அவர்களின் படங்கள் தான் நான் படித்த பாடங்கள். அவுங்க கெட்-அப் மாற்றிய படங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் அவர்கள் சிறந்த நடிகர்கள் தான். 'நவராத்திரி' படத்தில் சிவாஜி சார் நடிப்பும், 'மகாநதி'யில் கமல் சார் நடிப்பும் யாருமே மறுக்க முடியாதது. அந்த காலகட்டத்தில் அவர்கள் செய்தது மிகப் பெரிய விஷயம். இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதை மறுக்க முடியாதது.
'டுலெட்' ஒரு 'இண்டிபெண்டண்ட் மூவி' என்கிறார்கள்... மனைவியின் நகையை அடகு வைத்து எடுத்தேன் என்று செழியன் கூறியுள்ளார். இது போன்ற படங்களுக்கு இன்னும் அந்த நிலை தான் இருக்கா?
ஆமா... இப்பவும் சிறிய படங்களை தயாரிக்க பலரும் தயாராக இல்லை. இத்தனைக்கும் இப்போதெல்லாம் பெருசா, பொழுதுபோக்கா, மசாலாவா எடுக்கப்படுகின்ற பல படங்கள் தோல்வி அடைகின்றன. அதுல அவர்களுக்கு நஷ்டமும் பெரியது. ஒரு படம் அப்படி எடுக்குற பணத்தில் ரெண்டு, மூன்று சிறிய படங்களை எடுக்கலாம். வியாபாரமும் நன்றாகத்தான் இருக்கும், நஷ்டமானாலும் பெரிதாக இருக்காது, நல்ல படமெடுத்த பெயரும் காலம் காலமா இருக்கும். 'சேது' எடுத்த கந்தசாமி பெயர் இப்பவும் நமக்குத் தெரியும். மசாலா படங்களை மட்டும் எடுத்தவர்கள் பெயர் யாருக்குத் தெரியும்? இப்போ, இண்டிபெண்டண்ட் படங்களுக்கு உலக திரைப்பட விழாக்கள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் என்று வியாபார ரீதியாகவும் ஓரளவு வாய்ப்புகள் இருக்கு. தமிழ் சினிமாவின் எதிர்கால வடிவம் இதுவாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
சந்திப்பின் பொழுது சந்தோஷ் சொல்லிக்கொள்ளாத ஒரு விஷயம், இவர் கவிஞர் விக்ரமாதித்யனின் மகன் என்பது. இதை எங்குமே இவர் தானாக சொல்லிக்கொள்வதில்லையாம்.