![vattara valaku](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wj9qUOk_wWhALdB2yxaEHpDbdxuCVgr3SZHw186INTU/1588078970/sites/default/files/inline-images/vattaara-vazhaku-cmp_0.jpg)
தமிழில் ஒரு உலக சினிமாவான 'டுலெட்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்பே உலகின் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்று தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்த்தது. 'டுலெட்' படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் 'பரதேசி', 'ஜோக்கர்' உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 'டுலெட்' படத்தின் கதைநாயகனாக நடித்தவர் சந்தோஷ் நம்பிராஜன்.
செழியனை போலவே சந்தோஷ் நம்பிராஜனும் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். 'பரதேசி' படத்தில் செழியனின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தில் இவர் நடித்ததற்கு செழியன்தான் காரணமென்றாலும் அதன் பிறகு தன் ஆர்வத்தை நடிப்பின் பக்கம் வளர்த்துக்கொண்ட சந்தோஷ், அடுத்ததாக 'வட்டார வழக்கு' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மதுரை வட்டாரத்தில் மண்ணின் வேர்களோடு படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.
![agandan](http://image.nakkheeran.in/cdn/farfuture/iN3q4kcmR_cnyYZyHAh1ClcnRmiMo2FUF_cI3v1ovUY/1588079008/sites/default/files/inline-images/santhosh%20nambirajan%20-%20Copy_0.jpg)
ஒளிப்பதிவாளர், நடிகர் என்பதை தாண்டி இன்னும் சில முகங்களும் இவருக்கு இருக்கிறது. யூ-ட்யூபில், 'சந்தோஷ் நம்பிராஜன்' என்ற தனது சேனலில், நடிப்புப் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா தொடர்பான பிற அறிவுரைகளையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து சினிமா முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறார். இது மட்டுமல்லாமல் 'நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'சிங்கப்பூர் தீபாவளி', 'சிங்கப்பூர் பொங்கல்' ஆகிய தனியிசை பாடல்களை தயாரித்து வெளியிட்டார். அந்தப் பாடல்கள் இணைய தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பகிரப்பட்டன. நம்பிராஜன் என்பது இவரது தந்தை கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர்.
தற்போது தனது அடுத்த முயற்சியாக, நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் முழுக்க முழுக்க மொபைல் ஃபோனிலேயே 'அகண்டன்’ என்ற ஒரு முழுநீள திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ஐ-ஃபோன்-11ப்ரோவில் படமாக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கும் அவர், தனது இந்த ஐடியாவுக்கு வழி காட்டியதாக 'கான்டேஜியன்' பட புகழ் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பர்க்குக்கு நன்றி கூறுகிறார்.