![thunivu varisu celebration vijay fans helped ajith fan in salem](http://image.nakkheeran.in/cdn/farfuture/TDF38t_A6iT16Og19UWd5DxV3iYKfDxcJ2CFROqwchs/1673522594/sites/default/files/inline-images/100_71.jpg)
தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளில் கூடுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் எல்லாம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.
முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம், அடாவடி, உயிரிழப்பு, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் துணிவு படம் பார்க்க வந்த பிரதீப் என்ற அஜித் ரசிகர் திரையரங்கு கதவின் மீது ஏறி நின்று கொண்டாடிய போது தவறி விழுந்ததால் கால் முறிந்து மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை பார்த்த விஜய் ரசிகர்கள் நவீன், கவின், நற்குணராஜ் ஆகியோர் ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளனர். பின்னர் தண்ணீர் கொடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்துக்கு அவரை தூக்கி சென்றனர்.
அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவரது பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஒரு திரையரங்கில் இரு ரசிகர்களும் மாறி மாறி போட்டிப் போட்டுக் கொண்டு மோதலில் ஈடுபட்ட நிலையில், அஜித் ரசிகருக்கு விஜய் ரசிகர்கள் உதவி செய்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அங்கு பணியிலிருந்த பள்ளப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் இந்தச் சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நவீன், கவின், நற்குணராஜ் ஆகியோரை அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.