பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக சமீபத்தில் விக்ரம் படக்குழுவினருக்கு உணவு விருந்து வைத்தார். இப்படத்தின் இந்தி பதிப்பு வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி, பெங்களூருவில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை பார்த்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உழைக்கிற சமூகம், பூர்விகக் குடிகள், குறிப்பாக வேலூர் மாவட்டத்தை சார்ந்த மக்கள், கோலார் பகுதிக்கு சென்று தங்கம் எடுக்கும் கடுமையான பணியை இப்படம் பிரதிபலிக்கிறது. இயக்குநர் ரஞ்சித் அவருக்கே உரிய பாணியில் படமாக்கியிருக்கிறார்” என்றார்.
முன்னதாக மாரி செல்வராஜின் வாழை படத்திற்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்த நிலையில் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என்று ஒரு விமர்சனம் இருந்தது. அது குறித்தான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த திருமாவளவன், “படத்தை பார்த்த பிறகு தானே பாராட்ட முடியும். அதனால் பார்த்த பிறகு பாராட்டுவோம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.