
அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கரு. பழனியப்பன், தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது தங்கர் பச்சான் பேசுகையில், “இந்த திரைப்படம் நான் முதற்கொண்டு நிறைய பேர் பேசத் தவறியதை பேசி இருக்கிறது. இது 40 ஆண்டுகளில் என் படங்கள், என் சிறுகதைகள், நாவல்கள் கூட செய்ய தவறியதை இந்த படம் செய்து இருக்கிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் ஒரு பெரிய சிக்கலை இந்த படம் பேசுகிறது. ஒரு படம் என்பது சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை அடைய வேண்டும். பல அரசியல் இயக்கங்கள் செய்யத் தவறியதை இந்த படம் சாதித்திருக்கிறது. ஒரு போராளி என்பவன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சொல்லை, சிந்தனையை வைத்திருந்தால் போதும். கையில் சரியான கலையை வைத்திருக்கும் இயக்குநர் தான் போராளி..
படம் இயல்பாக இருந்தாலும் வசனங்கள் மனோகரா, பராசக்தி படங்களின் வருவது போன்று தான் இந்த படத்தில் உரையாடல்கள் இருக்கிறது. இந்த படத்திற்கு அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு முருகேஷ் பாபு வசனத்தை அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களான சாராவும் ஜீவாவும் உங்களை தூங்கவே விட மாட்டார்கள். மைம் கோபி என்ன மாதிரி நடிகர். இந்தியாவிலேயே தமிழில் தான் மிகச்சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஜெய் கிருஷ்ணன் இன்றைக்கு இருக்கும் பல திறமையான இயக்குநர்களை உருவாக்கியவர். அந்த வேலையை அமைதியாக செய்து வருகிறார். இந்த படத்தின் மூச்சு இசைஞானி தான். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் நான் அவருடன் தான் இருக்கிறேன். இந்த படத்தை முழுமையாக புரிந்து வைத்து எப்படி மக்களிடம் கொண்டு போக வேண்டும் என அழகாக செய்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனது இசையால் செதுக்கி உள்ளார்.
இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது. என்னுடைய மகனுக்கு இரண்டாவது படத்திலேயே இந்த கொடுப்பினை கிடைத்துள்ளது. படத்தை நான் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் இந்த படத்தில் என் மகன் நடித்தபோது இந்த படத்தின் கதையை நீங்கள் கேட்க வேண்டாம் என்னை நடிக்க விடுங்கள் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்.