
ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு காரணமாக அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்பு மீண்டும் படங்களில் கவனம் செலுத்திய சிவ ராஜ்குமார், தற்போது ‘45’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார்.
இப்படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதையொட்டி சென்னையில் நடந்த படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழாவில் சிவ ராஜ்குமார் படம் தவிர்த்து நிறைய விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது கமல் குறித்து பேசுகையில், “கமல் சார் நான் அமெரிக்காவில் இருந்த போது சர்ஜரி முடிந்ததும் கால் பண்ணி பேசினார். அவர் பேசியது என்னை நெகிழவைத்துவிட்டது. நான் அழுதே விட்டேன். அவர் சொன்னதை என்றைக்கும் மறக்க மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ கமல் என்றால் அழகு. நான் பெண்ணாக பிறந்தால் கண்டிப்பாக அவரை கல்யாணம் செய்திருப்பேன். நான் பல மேடைகளில் இதை சொல்லியிருக்கேன். அவரை ஒரு முறை நேரில் பார்த்த போது கட்டி பிடிக்க வேண்டும் என கேட்ட போது என்னை கட்டி பிடித்தார். அதன் பிறகு மூணு நாள் நான் குளிக்கவேயில்லை. அவருடைய ஆற்றல் என் மீது இருக்க வேண்டும் என நினைத்தேன். கமல் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியே போய்விடுவேன். அவரது தீவிர ரசிகர் நான்” என்றார்.