
54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் பிரித்விராஜ் - பிளஸ்ஸி கூட்டணியில் வெளியான ஆடுஜீவிதம் படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை தழுவல், சிறந்த ஒப்பனை கலைஞர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த கலரிஸ்ட், சிறந்த பிரபலமான திரைப்படம், சிறந்த நடிகர் (நடுவர் குழு தேர்வு) ஆகிய பிரிவுகளின் கீழ் மொத்தம் 9 விருதுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகைக்கான விருது ‘உள்ளொழுக்கு’ படத்திற்காக ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விருதுகள் வழங்கும் விழா கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். சிறந்த நடிகருக்கான விருதை முதல்வர் கையால் பிரித்விராஜ் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை வாங்கியுள்ளார். மேலும் ஊர்வசி சிறந்த நடிகைக்கான விருதை 6வது முறையாக வாங்கியுள்ளார். இந்த விருது இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.தடவு படத்திற்காக பீனா ஆர் சந்திரனுடன் ஊர்வசி பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில் மதிப்புமிக்க ஜேசி டேனியல் விருது இயக்குநர் ஷாஜி என் கருணுக்கு வழங்கப்பட்டது.