Skip to main content

“சமூகம்தான் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்” - தங்கலான் பறை இசைக்குழு !

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
 Thangalaan | Vikaram | Pa.Ranjith | PESU JK

சென்னை வேளச்சேரியில் பறை சம்பந்தமாக பல்வேறு இசைக் கருவிகளை பயிற்றுவிக்கும் கலைக்குழு  ‘பேசு’. இந்த கலைக்குழுவை நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவர் கலையை கற்றுவிப்பது மட்டும் இல்லாமல், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடத்தும் வானம் திருவிழா, மற்றும் மார்கழியில் மக்களிசை உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த கலையின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்துகின்றனர். அதோடு இவரின் கலைக்குழு  கர்ணன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களிலும் பங்கேற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து விக்ரமின் தங்கலான் படத்தில் பறை இசைக்கருவிகளை வாசித்து நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜெயக்குமாரின் கலைக் குழுவை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர்கள் தங்களின் வாழ்வியலைப் பற்றியும் தங்கலான் பட அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளனர். 

 Thangalaan | Vikaram | Pa.Ranjith | PESU JK

கலைக் குழு தலைவர் ஜெயக்குமார் பேசுகையில், “ 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பறை வாசித்து வருகிறேன். மேலும் பறை இசையைப் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். இதன் வாயிலாகத்தான் நான் இரண்டு எம்.எஸ்.சி. , எம்.எட். எம்.பில், பி.எச்.டி வரை படித்துள்ளேன். சின்ன வயதில் இறப்பு நிகழ்ச்சியில் பறை இசை வாசிப்பதை கேட்டு கேட்டுத்தான் இது குறித்த படிப்பு தொடங்கியது. இந்த இசையால் எனக்கு கிடைத்த பாராட்டு என்பது இந்த இசைக் கருவியை இறப்பு, பிறப்பு எந்த நிகழ்ச்சியில் வாசித்தாலும் இதை வாசிக்கும்போது வரும் சந்தோஷம்தான். சமூகம்தான் அவர்களது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இசையின் மதிப்பு வேறு ஒரு நிலையில் உள்ளது. அந்த நிலைக்கு நம்மதான் பயணப்பட்டு போகவேண்டும். நான் இத்தனை படங்களும், படிப்புகளும் முடித்திருக்கேன் என்றால் அது பறை எனக்கு அளித்த நன்கொடைதான்” என்றார்.

 Thangalaan | Vikaram | Pa.Ranjith | PESU JK

இசைக்கலைஞர் வீ.சேகர் பேசுகையில் “ சின்ன வயதில் பள்ளியில் அடி தாங்க முடியவில்லை. பிறகு அதை விட்டுவிட்டு இந்த இசையால் ஈர்க்கப்பட்டு கலந்து கொண்டேன். பின்பு தெருக்கூத்தில் இணைந்தேன். அதைத்தொடர்ந்து 45 வருடங்களாக தெருக்கூத்து நடத்தி வருகிறேன். குடும்பத்தில் எத்தனை கஷ்டம் இருந்தாலும், இந்த இசைக்கருவியை வாசிக்கும்போது மனதிலுள்ள கவலை நீங்கிவிடும் இதுதான் உண்மை. அனைத்து பறைஇசை கருவிகளில் மொத்தம் 32 வகையான டியூன் உள்ளது. இந்த பறை இசையில் இருந்துதான் அனைத்து இசையும் வந்தது. ஆதி இசை பறைதான். எனக்கு எப்படி இந்த இசை சத்தத்தில் கஷ்டங்கள் நீங்குகிறதோ அதுபோல இதை கேட்பவர்களுக்குகும் நீங்கும்”என்றார். 

 Thangalaan | Vikaram | Pa.Ranjith | PESU JK

இசைக்கலைஞர் வேங்கை வெங்கடேசன் பேசுகையில் “ இந்த கொம்பு பறை இசைக்கருவியை ஆறு ஆண்டுகளாக வாசித்து வருகிறேன்.   இந்த இசைக்கருவி குறித்த புரிதல் இல்லாமல், ஏதோ கிடைக்கக்கூடிய நிகழ்ச்சியில் வாசித்து  ஏனோதானோவென்று  இருந்தேன். ஆனால் இது போன்ற கலைஞர்களுடன் என்னுடைய பயணம் தொடங்கிய பிறகுதான் இதையே என்னுடைய வாழ்வியலாக மாற்றிக்கொண்டு அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய ஆரம்பித்தேன்” என்றார். 
இசைக்கலைஞர் சரண் ராஜ் பேசுகையில் “ நான் 12 ஆண்டுகளாக இதை வாசிக்கிறேன். நான்  மட்டுமில்லை இதை என் தாத்தா காலத்திலிருந்து வாசித்து வருகின்றனர். என் தாத்தாவை ஊர் தோட்டி என்று சொல்லுவார்கள். அதனால்தான் எனக்கு இதை பற்றிய ஆர்வம் அதிகமானது. இதை வாசிப்பதோடு பி.பி.சி பட்ட படிப்பையும் முடித்தேன். என்னுடைய முதல் இசை என் அப்பாவின் தாய் மாமா இறந்தப்போது வாசித்ததுதான். அப்போது எனக்கு சம்பளம் ரூ.7 மட்டும்தான். 

 Thangalaan | Vikaram | Pa.Ranjith | PESU JK

இசைக்கலைஞர்  மணி பேசுகையில் எங்க கிராமத்தில் தெருக்கூத்து ஆடுவார்கள். அப்பாவும் அவர்களுடன் சேர்ந்து ஆடுவார். அதைப் பார்த்து எனக்கும் காலில் சலங்கை கட்டி ஆட ஆசை வந்தது. ஆனால், கட்ட முடியவில்லை. பின்பு ஆங்காங்கே நடைபெறும் இறப்பு நிகழ்ச்சிகளில் பறை இசை வாசிப்பார்கள். அதைப் பார்க்கும்போது என்னுடைய கால் தானாகவே ஆடும். அப்பா தெருகூத்தில் ஆடுவது போல், இப்போது என்னுடைய கால்கள் பறை இசையால் ஆடுகிறது. நான் முதலில் வாசித்த கருவி பெயர் பலகை பறைதான். இதோட பெயர் கிடுகிட்டி பறை என்றும் துடுப்பு பறை என்றும் சொல்வார்கள்” என்றார் அதை தொடர்ந்து இசைக்கலைஞர் பிரதாப் பேசுகையில் “ சின்ன வயதிலிருந்து இதன் மீது எனக்கு ஆசை இருந்தது.  அப்படிதான் இந்த குழு உடனான பயணம் தொடங்கியது” என்றார். 

மேலும் தெரிந்துகொள்ள வீடியோ லிங்க்கை க்ளிக் செய்யவும். 

 

 

சார்ந்த செய்திகள்