தந்தை தந்த அறிமுகம்... ’தளபதி’ என்னும் புது முகம்! விஜய்யின் பயணம் #1
கட்டுரையின் தொடர்ச்சி...
தோற்றம், உடை, பேச்சு, சூழல் ஏன் படத்தின் கலர் வரை அனைத்திலும் அதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு வந்தன 'திருமலை' பட போஸ்டர்கள். மெக்கானிக் ஷாப்பில் விஜய் உட்கார்ந்திருக்கும் படங்கள். இந்த முறை உண்மையாகவே மெக்கானிக் போல தோற்றமளித்தார் விஜய். ஆனாலும் 'இதெல்லாம் அவருக்கு செட் ஆகாது' என்றே நினைத்தனர் எதிர்தரப்பினர். வெளிவந்த திருமலை வெற்றி பெற்றது. அஜித்துக்கு 'ஆஞ்சநேயா', விக்ரம், சூர்யாவுக்கு 'பிதாமகன்' விஜய்க்கு 'திருமலை' என அப்பொழுது தமிழ் சினிமாவில் போட்டியில் இருந்த நால்வரின் படங்களும் வெளிவந்த தீபாவளி (2003) அது. விஜய் ரசிகர்களுக்கு வெற்றி தீபாவளி ஆனது. திருமலை தொடங்கி வைத்த ஆட்டம், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என தொடர்ந்தது. இடையில் வெளிவந்த 'மதுர' இந்த வெற்றி வெளிச்சத்தில் சேர்ந்துகொண்டது. பின்னொரு காலகட்டத்தில் விஜய் ஒரே மாதிரியான மசாலா படங்களில் மட்டுமே நடிப்பவர் என்ற பேச்சு வந்தபொழுதும் ஒரு சிறிய பின்னடைவுக்குப் பிறகு நண்பன், துப்பாக்கி என வெரைட்டியாக வெற்றிகளைக் கொடுத்தார்.
விஜய், தனிப்பட்ட முறையில் பேட்டிகளிலோ, மேடைகளிலோ அதிகமாகப் பேசாதவர். அமைதியானவர், ரிஸர்வ்ட் டைப் என்றே அறியப்பட்டவர். ஆனால், சூழ்நிலைகள் எப்பேர்பட்டவரையும் கட்டுப்பாட்டை இழக்கவைக்கும் அல்லவா? அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என தொடர் தோல்விகள் நேர்ந்த காலகட்டம். 'வில்லு' படம் வெளியான பின் நிகழ்ந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. அதில் 'வில்லு' தோல்வி குறித்து விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த விஜய், அங்கிருந்தவர்கள் சிலர் சத்தம் ஏற்படுத்த, சட்டென கோபமுற்று, "ஏய்... சைலன்ஸ்... பேசிக்கிட்டிருக்கேன்ல.." என்று சத்தமாக சொல்ல, அந்த வீடியோ பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சமூக ஊடகங்கள், மீம்ஸ்கள் பரவலாக இல்லாத அந்த காலத்திலேயே அந்த வீடியோ பரவி விஜய்க்கு எதிர்மறையாக அமைந்தது.
விஜயின் ரசிகர்மன்றங்கள் 'விஜய் மக்கள் இயக்க'மானதும் அதே 2009ஆம் ஆண்டுதான். அதுகுறித்த ஆரம்பகட்ட கூட்டங்களும் விஜய்க்கு சரியாக அமையவில்லையென்றே கூற வேண்டும். ஒரு முறை விழுப்புரத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட விஜய், ஏதோ ஒரு அவசரத்தில் ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்து விறு விறுவென தன் காரை நோக்கி நடந்தார். அந்த சம்பவம் 'விழுப்புரம் ரன்' என கேம் தயாரிக்கும் அளவுக்கு சேட்டைக்கார இளைஞர்களுக்கு பயன்பட்டது. தூத்துக்குடியில் நடந்த கூட்டத்திலும் விஜய், தான் நினைத்ததை பேச முடியாமல், கட்டுப்படாத ரசிகர்களின் அன்புக்கிணங்கி 'வேலாயுதம்' பட பாடலைப் பாடிவிட்டு இறங்கினார். இப்படி ஆரம்பத்தில் சில தருணங்களில் சொதப்பிய விஜயின் மேடை பேச்சுகள், 2014 விஜய் அவார்ட்ஸ் மேடையில் மின்னியது. கிரீடம் எவ்வளவு கனமாக இருந்தாலும் அதைத் தாங்கும் தலை கனமாக இருக்கக் கூடாது என்ற அவரது பேச்சில் 'தலைவா' பட அனுபவம் தந்த பக்குவமும் எதிர்கால திட்டங்கள் கோரிய தயாரிப்பும் தெரிந்தது. அதன் பிறகு அனைத்து மேடைகளிலும் அது தொடர்கிறது.
விஜயின் அரசியல் தொடர்புகளும் குறிப்பிடத்தக்கவை. ஆரம்பத்தில் திமுக குடும்பத்துடன் நெருக்கம், 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்ட அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது, ராகுல் காந்தியை சந்தித்தது, 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது, 2014 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்தது என அரசியலோடு அவ்வப்போது தொடர்பிலேயேதான் இருந்தார் விஜய். அதே அரசியல் இவருக்கு சில சங்கடங்களையும் தந்திருக்கிறது.
தான் ஆதரித்து, அணிலாய் உதவிய அதிமுக அரசும் ஜெயலலிதாவும் தன் 'தலைவா' பட்டத்தை, இல்லை, படத்தை வெளிவர விடாமல் தடுப்பார்கள் என எண்ணவில்லை விஜய். அது குறித்து ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு செல்ல முயன்றும் தோல்வியே. அதுபோல 'மெர்சல்' வெளியானபோது பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும், அதைத் தொடர்ந்து ஹெச்.ராஜாவும் காட்டிய எதிர்ப்பைக் கூட இவர் எதிர்பார்த்திருப்பார், அந்த எதிர்ப்பே இவ்வளவு பெரிய கவனத்தையும் வெற்றியையும் பெற்றுத் தருமென இவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். 'ஜோஸப் விஜய்' என்று குறிப்பிட்ட ஹெச்.ராஜாவுக்கு பதிலடியாக அதே பெயர் கொண்ட லெட்டர் பேடில், விஜய் அறிக்கை விட்ட போது ரசிகர்களில் பலர் கொண்டாடினர், சிலர் குழப்பம் அடைந்தனர்.
மெர்சலில் இப்படியென்றால் சர்காரின் பாடல் வெளியீட்டு விழாவிலேயே பற்ற வைத்தார் விஜய். "நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன்" என்று கூறி சர்ச்சைக்கு இன்வைட் வைத்தார். அதே போல 'சர்கார்' படத்தில் இலவசங்களுக்கெதிரான வசனங்கள், அரசு கொடுத்த விலையில்லா மிக்சியை தூக்கி தீயில் போடுவது போன்ற காட்சி என இந்த முறை அதிமுகவின் எதிர்ப்பை பெற்றது விஜய் படம். மெர்சல், சர்கார் படங்கள் வெற்றி பெற்றவை என்றால் அந்த வெற்றியில் சர்ச்சைகளுக்கும் முக்கிய பங்குண்டு. சர்ச்சைகளுக்கெதிராக விழுந்து விடாமல் உறுதியாக நின்றார் விஜய். அடுத்ததாக தங்கள் தளபதிக்கு 'பிகில்' அடித்தனர் விஜய் ரசிகர்கள். ‘மாஸ்டர்’ விழாவில் எப்போதும் போல அவர்களை குஷிப்படுத்தும் விதமாகப் பேசினார் விஜய்.
இந்தப் பயணம் முழுவதிலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியின் பங்கு மிகப் பெரியது. முதலில் விஜய் நடிகராவதை அவர் விரும்பவில்லையென்றாலும், அனுமதி தந்து அறிமுகம் செய்த பிறகு, விஜய்யின் இமேஜை செதுக்கினார் என்றே சொல்லலாம். எஸ்.ஏ.சி இயக்கிய படங்கள் விஜய்க்கு பிற்காலத்தில் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்றாலும் விஜய்யின் தேர்வுகளில் எஸ்.ஏ.சியின் பங்களிப்பு இருந்தது. அரசியலின் அருகில் விஜய்யை கொண்டு வந்ததும் எஸ்.ஏ.சி தான். இன்று மக்கள் இயக்கமாக உருவெடுத்து நிற்கும் இந்த இயக்கம், எஸ்.ஏ.சியால் தொடங்கி வளர்க்கப்பட்டதே. ஊர் ஊராகப் பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் அவர்.
ஆனால், அவ்வபோது அவர் பேசும் சில கருத்துகளில் விஜய்க்கு ஒப்புதல் இல்லை என்று கூறப்பட்டது. கமல்ஹாசனுக்காக இளையராஜா கலந்துகொண்டு நடத்திய விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சி, ’கமல் - ரஜினி இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும், அதன் பின்னர் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்’ என்று விஜய்யை மனதில் வைத்துப் பேசியதை விஜய் ரசிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. தான் ஒரு தனி சக்தியாக உருவெடுக்க நினைக்கும்போது எதற்காக அவர்கள் வழிவிட வேண்டும் என்ற கேள்வி இருந்ததாம். இப்போது, விஜய் - எஸ்.ஏ.சி - கட்சி விண்ணப்பம் - மறுப்பு என இந்தக் குழப்பம் சரியாக வேண்டும் என்பதே விஜய் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினரின் எதிர்பார்ப்பு. காத்திருப்போம்!