![ennio](http://image.nakkheeran.in/cdn/farfuture/rdKQiqkIYSPr3vkFrks80kFBcdwAvtMBqgHZD-8OIxI/1594100409/sites/default/files/inline-images/ennio.jpg)
ஹாலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான எனியோ மொரிகோனே தனது 91 வயதில் காலமானார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த எனியோ இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இசையமைத்துள்ளார். 'இசை மாமேதை' என்று அனைவராலும் அன்போடு ஏற்றுக் கொள்ளப்பட்டவர் எனியோ. இவருக்கு ஆங்கில மொழி தெரியாது ஆனால் ஆங்கில மொழி படங்களுக்கு தனது இசையின் மூலம் உயிர்கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோரிகோனே தனது இல்லத்தில் கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டார். இதன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு ரோம் மருத்துவமனையில் காலமானார்.
இதனை அவருடைய வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். எனியோ இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பல சர்வதேச உயரிய விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார். சர்வதேச சினிமாவில் ஐம்பது வருடங்களைக் கடந்த வாழ்நாள் சாதனையாளர் எனியோ. எனியோவின் ரசிகர்களும், பிரபலங்களும் அவரது மறைவிற்குச் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்களான கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஹ்மான் - “எனியோ மோரிகோனே போன்ற ஒரு இசையமைப்பாளரால்தான், மெய்நிகர் காலத்துக்கும், இணையக் காலத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் இத்தாலியின் அழகு, கலாச்சாரம், காதல் ஆகியவற்றை உங்கள் உணர்வுகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும். நம்மால் செய்ய முடிவது எல்லாம், அந்த ஆசானின் படைப்புகளைக் கொண்டாடி, அதிலிருந்து கற்பது மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ivcz__3NP0Kg7DKSZn9v4NaT8EzjPE1uO3Obz6YN1s/1590822160/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)
கமல் - “குரு எனியோ மோரிகோனே. நாங்கள் உங்கள் இழப்பை உணரமாட்டோம் ஐயா. நாங்கள் கேட்கத் தேவையான இசையை, வாழத் தேவையான இசையை, இன்னும் மேம்படுத்தத் தேவையான இசையை, நீங்கள் கொடுத்ததை மிஞ்சிப் போகவும் தேவையான இசையை எங்களுக்குத் தந்துவிட்டீர்கள். நன்றி மற்றும் வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் - “இசையமைப்பாளர் என்னியோ மோரிகோனேவின் மறைவு செய்தியைக்கேட்டு அதிர்ச்சியடந்தேன். அவருடைய பின்னணி இசை மற்றும் மனதை வருடம் மெலடிகளை கேட்டதன் மூலம்தான் சினிமா இசையை நான் கற்றுக்கொண்டேன். அவருடைய இசை நம்முடன் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.