Skip to main content

“இது செயலுக்கு வர வாய்ப்பில்லை...”- எஸ்.வி. சேகர் ட்வீட்!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

sv sekar

 

கரோனா அச்சுறுத்தலால் கடந்த 100 நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. மேலும், மூடப்பட்டுள்ள திரையரங்குகள் இனி எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியப்படவில்லை. இதனிடையே, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த 6ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 

இதனைத் தொடர்ந்து நேற்று தயாரிப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக அனைவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

கரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படிச் சரி செய்யலாம் என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

 

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பளக் குறைப்பு குறித்து நடிகர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருமனதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

 

இதனிடையே, இந்தத் தயாரிப்பாளர்கள் ஆலோசனை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இன்னும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலே நடைபெறவில்லை. அதற்குள் ஒரு சிலர் எடுத்த முடிவு எப்படிச் சங்கத்தின் முடிவாகும் என்று சில தயாரிப்பாளர்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.

 

தயாரிப்பாளர்களின் ஆலோசனையை எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். அதில், “தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் முடங்கியுள்ள வேளையில், சில பட அதிபர்களின் ஆலோசனையான இது விளம்பரத்துக்குப் பயனாகும். செயலுக்கு வர வாய்ப்பில்லை. சங்கத் தேர்தலில் நிற்கும் ஒரு அணியின் விளம்பர நடவடிக்கையே” என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

 

 

சார்ந்த செய்திகள்