சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரபாண்டியபுரம்'. இசையமைப்பளாராக நடிகர் ஜெய் அறிமுகமாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், "கோவிட்டால் நம் வாழ்க்கையில் நிறைய இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம். நான் மகான் அல்ல படத்திலிருந்து என்னுடன் 10 வருடங்களாக பயணித்த என்னுடைய மேனேஜர் ஆண்டனி திடீரென மறைந்தது அதிர்ச்சியாக இருந்தது. வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் நிதிஷ் மரணமும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. யுவன் சங்கர் ராஜா மேனேஜரும் என் நண்பருமான கார்த்தி, என்னுடைய வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில் மாரடைப்பால் ஒரு நொடியில் மரணமடைந்துவிட்டார். வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எனக்கு இரண்டு அம்மா. கடந்த பொங்கலையொட்டி அதில் ஒருவர் இறந்துவிட்டார். கடந்த 12 வருடங்களில் ஒரு வருடம்கூட நான் வேலை செய்யாமல் இருந்ததில்லை. ஆனால், போன வருடம் ஒருநாள்கூட ஷூட்டிங் போகவில்லை. என்னால் வேலை செய்யவே முடியவில்லை.
அம்மா மரணித்தபோது நான் மட்டும்தான் மருத்துவமனையில் உடனிருந்தேன். அவர் இறந்துவிட்டார் என்பது தெரிந்தவுடன் அதை எப்படி அப்பாவிடம் செல்வது என்று எனக்கு உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. இதையெல்லாம் தாண்டி சினிமா மீது நான் வைத்துள்ள காதல்தான் என்னை நடமாட வைக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஷூட்டிங் சென்றால் மறந்துவிடுவேன்" எனக் கூறினார்.