![sr prabhu](http://image.nakkheeran.in/cdn/farfuture/yGQZbWhdsxkj7yGP2BMaU8rIMY5zkyn60InLqXrEJzI/1600065674/sites/default/files/inline-images/sr-prabhu_3.jpg)
தயாரிப்பாளர்கள் சார்பாக திரையரங்க உரிமையாளர்களிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இதுகுறித்து தெரிவிக்கையில், “நம் வியாபார முறை என்பது, படம் நாங்கள் எடுக்கிறோம், பார்வையிடும் வசதி நீங்கள் தருவீர்கள். பார்வையாளரிடம் இருந்து வசூலிக்கும் தொகையை திரையரங்கு தரம் பொருத்து நாம் பேரம் முறையில் பங்கிட்டுக் கொள்வோம் என்பது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் VPF மூலமும், ஆன்லைன் புக்கிங் மூலமும் திரையரங்குகள் தனியாக பிரித்து அதிக லாபம் ஈட்டுவதே எங்கள் பிரச்சனை. நீங்கள் ப்ரொஜெக்டர் வாங்க, மாற்ற தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி வருவது தவறில்லை என்றால், நாங்கள் விளம்பர வருவாயை கேட்பதும் எவ்வித தவறும் இல்லை.
இவ்வளவு காலம் ஏன் கேட்கவில்லை என்றால், உண்மையில் நாங்கள் நிலைகுலைந்திருந்தோம். உங்களையே சார்ந்து இருந்தோம். எல்லா வகையிலும் இழப்பை மட்டுமே கண்டு வருகிறோம். இயலாமை எங்களை கேட்க செய்தது. அதை பார்த்து நன்றி அற்றவர்கள் என்று கூறுகிறீர்கள். ஏமாற்றப்பட்டவர்களாக உணரும் எங்களிடம் எப்படி நன்றி எதிர்பார்க்கிறீர்கள்.
20 வருடகால திரைப்படவரலாற்றில் தயாரித்து நல்ல நிலைக்கு வந்துள்ள தயாரிப்பாளர்களை தேடிப்பாருங்கள். நல்ல நிலையில் முன்னேறிய பைனான்சியர், distributor-களை உங்களால் காண இயலும். ஆனால் எத்தனை தயாரிப்பாளர்களை காணமுடிகிறது. சண்டையிடுவதும், வாதம் செய்வதும் எங்கள் நோக்கமல்ல. தற்போது எங்களுக்கு எங்கள் வாழ்வியல் மட்டுமே முக்கியம். தயாரிப்பாளர் வாழ்ந்தால் அனைத்தும் சுகிக்கும். அதுவே தீர்வு. இது சுயநலம் மட்டுமல்ல பொதுநலமும்தான்” என்றார்.