தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.09.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நலிந்த நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளையும், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளையும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 கலைஞர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். சமூகத்தின் கட்டமைப்பை உற்று நோக்கி வேண்டுவோர் யார். வேண்டுவது எது என ஆராய்ந்து உற்ற நேரத்தில், உறுதுணையாய் நிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் அதை வழி நடத்திச் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கலையொன்றே வாழ்வாதாரமாய் வாழ்ந்துருகும் நலிந்த கலைஞர்களுக்கு சன்மானங்களையும், உதவிகளையும் திட்டமிட்டு செயல்படுத்தியமைக்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறது. தொழில் வளம் மற்றும் பொருள் வளத்தோடு நின்றுவிடாமல் கலை வளத்தையும் மனதில் கொள்ளும் அரசுக்கும் முதல்வருக்கும் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.