சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி நிறுவனர் சங்கரன் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் தூக்கிலிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த செய்தி அவரது ஆயிரக்கணக்கான மாணவர்களையும் அவரால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும் மட்டுமல்லாது அவரைப் பற்றி அறிந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது நண்பர்களும் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சங்கரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த நகைச்சுவை நடிகர் சூரி பலரும் எதிர்பாராத வகையில் மிகவும் கலங்கிப்போனார். "டைரக்டர் சற்குணம் திடீர்னு காலைல ஃபோன் பண்ணி சொன்னார், 'சங்கர் சார் இறந்துட்டாரு'னு. என்னால நம்பவே முடியல. 'என்னங்க சொல்றீங்க, நெஜமாத்தான் சொல்றீங்களா? உறுதியான தகவல்தானா?'னு திரும்பத் திரும்பக் கேட்டேன். ஏன்னா, அந்த அளவுக்கு மத்தவங்க பிரச்சனைக்கெல்லாம் தீர்வு தந்தவர், நம்பிக்கை தந்தவர் சங்கரண்ணன்.
எனக்கு சமீபத்தில் ஒரு பிரச்சனை வந்துச்சு. அதை யாருகிட்ட சொல்றதுன்னே தெரியல, என்னாலையும் அதை தீர்க்க முடியல. என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிஞ்ச அந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சங்கர் சார் என்னைக் கூப்பிட்டு 'ஒன்னும் கவலைப்படாதீங்க, நமக்கு உதவ நிறைய பேர் இருக்காங்க. பாத்துக்கலாம்" என்று சொன்னார். நான் என் மனைவியிடம் நம்பிக்கையாகச் சொன்னேன், "சங்கரண்ணன் பேசுனாரு, கண்டிப்பா பிரச்சனை முடிஞ்சுடும்"னு. நான் அவர்கிட்ட பேசும்போதெல்லாம் சொல்லுவார், "நிறைய சம்பாரிச்சா ஒரு இலவச ஐஏஎஸ் சென்டர் ஆரம்பிங்க. முடியாத நம்ம பசங்க அதிகாரத்துக்கு வரணும்"னு. இப்படி எல்லாருக்கும் நல்லது, தைரியம் சொன்ன மனுஷன் இப்படி ஒரு முடிவு எடுப்பாருன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கல" என்று மிகுந்த சோகத்தோடு கூறினார். சோகத்திலிருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் இருக்கிறார் சூரி.
மறைந்த சங்கரன் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர். அவரது கல்லூரி கால கனவு சினிமாவில் நடிக்கவேண்டுமென்பதே. பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியில் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்தபின்னும் கூட அவரது ஆசை தீரவில்லை. சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த 'சண்டி வீரன்' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் சங்கரன்.