வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் நேற்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூரி பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது படங்கள் குறித்துப் பேசிய சூரி, “விடுதலை 2 இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு இருக்கு. எனக்கான போர்ஷன் முடிஞ்சிருச்சு. சீக்கிரம் வெளியாகவுள்ளது. விடுதலைக்கு முன்னாடி கருடன் வந்துவிடும். அந்த பட படப்பிடிப்பு அனைத்தும் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்துக்கிட்டு வருகிறது. அதுவும் விரைவில் வரும். கண்டிப்பா விடுதலை மாதிரி கருடன் படமும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு நல்ல படமா இருக்கும்” என்றார்.
அவரிடம் உதயநிதி மதுரையில் பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். நடைபெறவுள்ள தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு தேர்தலும் அதன் ரிசல்ட்டு வந்த பிறகுதான் தெரியும். நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு நல்லதாக அமைந்தால் இன்னும் சந்தோஷம்” என்றார்.
உதயநிதி பிரச்சாரத்திற்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு, “அவர் என்னை அழைக்கவில்லை. நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பேன் என அவருக்கு தெரியும்” என்றார். புதிய வாக்களர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய விஷயம் என்ன என்ற கேள்விக்கு, “கன்னி சாமி மாதிரி எல்லாரும் கன்னி ஓட்டுக்கு ரெடியா இருக்காங்க. ஒவ்வொரு ஓட்டும் சாதாரணமானது கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. நம்முடைய வாழ்க்கைக்கான ஓட்டும் கூட. அதை கணிச்சு, யாருக்கு போடணுமோ அவர்களுக்கு போடுவாங்க என நம்புறேன்” என்றார்.