ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இந்த அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவைத் தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சிவகுமார், தன் வாழ்வில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்து மேடையிலே கண்ணீர் விட்டார். பின்பு தொடர்ந்து பேசிய அவர், "எங்க அம்மா என் படிப்பிற்காக அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு ஹைஸ்கூல் போனேன். காமராஜர்லாம் அப்போ எங்களுக்கு உதவி செய்யவில்லை. கட்டணம் கட்டி தான் படிச்சோம். மொத்த பள்ளிப் படிப்புக்கும் ரூ. 750 மட்டும் தான் செலவு செய்தேன். ஆனால் இப்போது கார்த்தியின் குழந்தைக்கு ப்ரீகேஜிக்கு இரண்டரை லட்சம் கேட்கிறார்கள்.
கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். வாத்தியார்களில் சாதியை பார்க்காதீர்கள். எங்களுக்கு இருந்தவங்க எல்லாரும் பிராமணர் வாத்தியார்கள் தான். 10 வாத்தியார்களில் 8 பேர் அவர்கள்தான். அவர்களெல்லாம் வாத்தியார்கள் அல்ல கடவுள்கள். பள்ளிக்கூடத்தில் குரூப் ஃபோட்டோ எடுக்க 5 ரூபாய் கேட்டார்கள். அந்த காசு இல்லாததால் நான் ஃபோட்டோ எடுக்குற இடத்துக்கு செல்லவில்லை. அதை கவனித்த ஒருவர், காசு இல்லைன்னா பரவாயில்ல வந்து ஃபோட்டோவுக்கு மட்டும் நின்னுட்டு போ என்றார். எனக்கு தன்மானம் தடுத்தது. அதனால் வெளியே போய்விட்டேன்.
இதுவரை 40 வருஷத்தில் 190 படங்கள் நடித்துவிட்டேன். ஃபிலிம்-ஆக கணக்கிட்டால் 40 கோடி ஃபிரேமில் என்னுடைய முகம் பதிஞ்சிருக்கு. ஆனால் 5 ரூபாய் குரூப் ஃபோட்டோவில் இல்லை. அதன் பிறகு 50 ஆண்டுகள் கழித்து அங்க போய் ஃபோட்டோ எடுத்தேன். என் கவனம் முழுவதும் படிப்பில் மட்டும் தான் இருந்தது. பின்பு ஓவியராக ஆகி அதுக்கப்புறம் நடிக்க வந்துவிட்டேன். 87 கதாநாயகிகளுடன் டூயட் பாடினேன். இப்போது ஒரு அம்மாவோடு வாழ்ந்து வருகிறேன். நான் மட்டும் ஒரு ஓவியனாக வாழ்ந்திருந்தால் சத்தியமாக சொல்றேன் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். இந்த வயசுல திருவண்ணாமலையில் தாடியுடன் குச்சியோடு இருந்திருப்பேன். காலத்தின் கட்டாயத்தால் சினிமாவுக்கு வந்துவிட்டேன். எனக்கு நல்ல குழந்தைகள் பிறந்ததால் இங்கு இருக்கேன்.
50 வயதிற்கு பின்பு கை கால்கள் எல்லாம் ஓய்ந்துவிடும். சம்பாதிக்க முடியாது. அப்போது யார் சாப்பாடு போடுவார்கள் என்று இருக்கும் போது தான் நமது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் வெற்றிகரமாக வாழ்ந்தால் தான் நாம் நல்லாருக்க முடியும். அதனால் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். எனக்கு 81 வயது, சமீபத்தில் திருக்குறளை 4 மணி நேரம் நிறுத்தாமல் பேசியிருக்கிறேன். என்னுடைய குருநாதர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆரும் தான். இருவரும் 71, 72 வயதிலே போய்விட்டார்கள். நான் 81 வயதில் பேசிக்கொண்டிருக்கிறேன். இதை பெருமைக்காக சொல்லவில்லை. ஒழுக்கத்திற்காக சொல்கிறேன். அதனால் மகிழ்ச்சியான வாழ்வை எல்லாரும் வாழ வேண்டும்" என்றார்.