சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’, இப்படத்தை கூழாங்கல் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை விருதுகளையும் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில் “கூழாங்கல் படம் பார்த்தேன். அதை உண்மையிலேயே புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. நான் உலக சினிமாக்களை பார்த்தது இல்லை, தமிழ் சினிமா மட்டும்தான் பார்த்துள்ளேன். இங்கே உள்ள படங்கள் பற்றித்தான் என்னுடைய புரிதல் இருந்தது. அதன் பிறகுதான் கூழாங்கல் படத்தைப் பார்த்து, கேட்டு தெரிந்துகொண்டேன். அந்தப் பட இயக்குநர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கினதாக சொன்னார்கள். அந்த விருது அறிமுக இயக்குநர்களுக்காகத் தருவது என்றார்கள். இதற்கு முன்பு இதை ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் வாங்கியதாகக் கூறினார்கள். அதன் பிறகு கூழாங்கல் பட இயக்குநரிடம் நீங்கள் எந்த ஊர்? என்றேன். அதற்கு அவர் மதுரை என்றார். எனக்குப் புல்லரித்துவிட்டது,
மதுரையிலிருந்து சர்வதேச அளவில் கிறிஸ்டோபர் நோலன் வாங்கிய விருதைப் பெற்ற இவர் குறித்து ஏன் இது வெளியே தெரியவில்லை? என்ன காரணம்? என யோசித்து, அவரின் அடுத்த படத்தைத் தயாரிக்க நான் முடிவெடுத்தேன். கதைக்காகத் தயாரிப்பதைத் தாண்டி இப்படி ஒருத்தரை செலிபிரேட் பண்ணுவதற்காக அவரின் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படம் எனக்கு லாபமாக வந்தால் அதில் ஒரு பகுதியை அவரின் அடுத்த படத்தின் அட்வான்ஸாக கொடுப்பேன். அவர் என்ன படம் எடுக்க வேண்டும் என நினைக்கிறாரோ அதை எடுக்கட்டும். அதன் மூலம் இன்னும் லாபம் கிடைத்தால் இவரைப் போல இரண்டு நபர்கள் இருந்தால் அவர்களை வைத்தும் படம் தயாரிப்பேன்.
நான் சம்பாதிக்க நடிகன் என்ற அங்கீகாரம் கொடுத்து என் படத்தின் வியாபாரத்தையே பெரிதாக வைத்துள்ளீர்கள். நான் கடுமையாக உழைத்தால் நிச்சயம் பணம் வரும். அதிலிருந்து சினிமாவுக்கு பயனுள்ள வகையில் செய்யவேண்டுமென்றுதான் இது போன்ற படங்களைத் தயாரிக்கிறேன். இந்த மாதிரியான படங்கள் எடுக்கத் தைரியம் கொடுத்தது மக்கள்தான். நான் பார்த்து ரசித்த இயக்குநர்கள் கே. பாலச்சந்தர் முதல் இப்போது உள்ள வெற்றிமாறன் வரை, அவர்களின் சிறப்பான செயலுக்கு வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க பரிசாக இந்த கொட்டுக்காளி திரைப்படத்தைப் பார்க்கிறேன். வினோத் இந்த படத்தில் இசையமைப்பாளர் இல்லை எனக் கூறினார். அது எப்படி என்று ஒரு நிமிடம் யோசித்தேன். இசை இல்லாமல் பயணிக்கும் கதாபாத்திரத்தை அவர் எப்படி உணர்ந்தாரோ அதை ஆடியன்ஸும் உணரவேண்டும் என்று அவர் சொன்னார். அதனால் இந்த படம் நிச்சயமாக புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதிதாக முயற்சி செய்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமாவையே மாற்றப் போகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், வினோத் செய்வார் என்று நம்புகிறேன்.
இந்த படத்தில் நடித்த அன்னா பென் நன்றாக நடித்திருந்தார். சூரி அண்ணா எனக்கு காமெடியன், ஹீரோ என்பதைத் தாண்டி நல்ல நடிகர், அவரால் ஏன் இந்த மாதிரியான கதைகளில் நன்றாக நடிக்கமுடிகிறது என்றால் அவரின் வாழ்க்கை அனுபவம் அந்த அளவிற்கு உள்ளது. கல்லூரி சென்று நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையிலிருந்தே வாழ்க்கைக்குத் தேவையானதை அவர் எடுத்துக்கொண்டார். அதை வெளிப்படுத்தும் போது இந்த மாதிரியான நடிப்புகள் அவரிடம் இருந்து வருகிறது. விடுதலையில் வெற்றிமாறன் நன்றாக அவரை நடிக்க வைத்திருந்தார், அவர் யாராக இருந்தாலும் நடிக்க வைத்துவிடுவார். ஆனால், கண்டிப்பாக விடுதலையை விட கொட்டுக்காளி படம் ஒரு மார்க் அதிகமாக வாங்கிவிடும் என்று சூரி அண்ணனிடம் சொன்னேன். அப்போது நான் விடுதலை பார்க்கவே இல்லை.
இந்த படத்தில் சூரிக்கு தேசிய விருது கிடைத்தால் என்னைவிட அதிகமாக சந்தோஷப்படும் நபர் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி வாங்காவிட்டாலும் வெற்றிமாறன் படத்தில் வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படம் தரவுள்ள வசூலை தாண்டி, வினோத்தை தமிழ் சினிமாவின் பெருமையாக நான் பார்க்கிறேன். அவர் இந்த படத்தில் எல்லா வகையான அரசியலையும் பேசியுள்ளார். அதைத் திணிக்காமல் கதையோட்டத்திலேயே சொல்லியுள்ளார். இந்த படைப்பை ஆதரித்தால் என்னுடைய தயாரிப்பிலிருந்து இது போன்ற படங்கள் நிறைய வரும். நிறைய இயக்குநரை நான் தான் கண்டுபிடித்து வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கப்படுத்திவிட்டார்கள். அந்த மாதிரியான ஆள் நான் இல்லை. நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து நண்பர்களை அறிமுகம் செய்வதுபோலத்தான் இது. வெற்றியடைந்தால் நிச்சயம் இதுபோல தொடரும்” என்றார்.