
கேரளாவில் அம்மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரம் உள்ளடக்கிய பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் விதமாக ‘பினராயி பெருமா’ விழா கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவின் கடைசி நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அவருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பினராயி விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் உரையாடல் மேற்கொண்டது சிறப்பாக அமைந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ‘பினராயி பெருமா’ விழாவில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “முதன் முறையாக கன்னூரில் இருக்கும் பினராயி பகுதிக்கு வந்திருக்கிறேன். இவ்வளவு நாள் பினராயி என்பது முதலமைச்சர் பெயர் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அது அவருடைய ஊரின் பெயர் எனத் தெரிந்து கொண்டேன். ரஜினி நடித்த முரட்டுக்காளை பட பாடலில் ஒரு பிரபலமான வரி உண்டு,‘பொறந்த ஊருக்குப் பெருமை சேரு. வளர்ந்து நாட்டிற்குப் புகழைச் சேரு’. இந்த பாடலின் வரிகள் உண்மையானது எப்படி என்பதை பினராயி விஜயன் சாரை பார்த்தால் புரிந்து விடும் . அவர் வாழ்ந்த ஊரில் இருந்து இப்போது ஒரு ஆளுமையாக உயர்ந்திருக்கிறார். அந்த ஊரில் இது போன்ற விழாவை நடத்துவது மகிழ்ச்சி. கலை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடுகிற எல்லா மாநிலங்களும் எப்போதுமே ஸ்பெஷல்தான். அதுதான் நம்ம இந்தியாவினுடைய சிறப்பும். இன்றைக்கு இந்தியா முழுக்க கேரள சினிமாவை ரசிக்கின்றனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில மக்களின் அன்புக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கண்ணூரில் உள்ள பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவிற்கு அழைக்கப்பட்டதில் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், சபாநாயகர் ஏ. என். ஷம்சீர், நடிகர் ஆசிப் அலி, மற்றும் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ‘தி இந்து’ ராம் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. கேரள மக்களின் அன்பும் அரவணைப்பும் என்னை ஆழமாகத் தொட்டது. இந்த மறக்க முடியாத நினைவுக்கு மிக்க நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.