![A silent tribute to singer Vani Jayaram in the Assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/zpkPixARQCMAdlIZm7RYevdNrtic9VLaId81NwkwrMg/1679552677/sites/default/files/inline-images/300_50.jpg)
2023 - 2024 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து கடந்த 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நேற்று (22.03.2023) உகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று (23.03.2023) பட்ஜெட் கூட்டத்தொடரின் 3 ஆம் நாள் கூட்டம் சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அப்போது பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் இரண்டு மணித்துளிகள் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு உள்ளிட்டோருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) கடந்த மாதம் 4 ஆம் தேதி (04.02.2023) காலமானார். 1971 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் வாங்கியுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.