அர்ஜுன், மதுபாலா, நம்பியார், மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் ஜென்டில்மேன். குஞ்சுமோன் தயாரித்திருந்த இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படம் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். ஏ.ஆர் ரஹ்மான். இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அதனை கேக் வெட்டிக் கொண்டாடினர் ஷங்கர் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள். இதோடு 30 ஆண்டுகளைக் கடந்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் ஷங்கர். அவருக்குப் பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தெலுங்கு நடிகர் ராம் சரண், "இந்தியத் திரையுலகின் உண்மையான கேம் சேஞ்சர்" எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ராம் சரணுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்ட ஷங்கர், "ஆகஸ்டில் அடுத்த நகர்வுக்கு காத்திருக்க முடியவில்லை" என ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார். இருவரும் பணியாற்றி வரும் கேம் சேஞ்சர் படத்தின் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. கடந்த மே மாதத் தொடக்கத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கி முடித்துள்ளதாகத் தெரிவித்தார். பின்பு இம்மாதத் தொடக்கத்தில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே கமலை வைத்து 'இந்தியன் 2' படத்தை ஒரே சமயத்தில் கவனித்து வருவதால் அப்படத்தின் விஎப்எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்காவில் உள்ளதாக அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you Ram for your sweet wishes! #GameChanger Can’t wait for our next move this August! 🤗❤️ https://t.co/xd1uyxBljc— Shankar Shanmugham (@shankarshanmugh) July 31, 2023