சின்னத்திரையில் மிகவும் பிரபல நடிகையான ஜெயலட்சுமி, வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர் என்னதான் தமிழ் சினிமாக்களில் நடித்து வந்தாலும் இவரது பூர்வீகம் கேரளாதான். ஆனால், பணிக்காக சென்னையில் வசித்து வருகிறார்.
நடிகை ஜெயலட்சுமி கடந்த மாதம் பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் பின் பாஜகவின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜக அமல்படுத்தியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியா முழுவதும் அந்த சட்டத்திற்கு எதிராக எதிர் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதை எதிர்த்து நடிகை ஜெயலட்சுமி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், அவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அவர்கள் ஆட்சிக்காலத்தில் அச்சட்டத்தை ஆதரித்தவர்கள் தான். சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்யப்படுகின்றன.இலங்கைத் தமிழர் விவகாரத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்படும், இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறினார்.