![selvaraghavan Bakasuran new poster out now](http://image.nakkheeran.in/cdn/farfuture/z5ryr-EXVdx4q6l1WuUL2vyXnGxtNwKJ_-ItJJZHu7Q/1656423917/sites/default/files/inline-images/1082.jpg)
'பழைய வண்ணாரப்பேட்டை' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பகாசூரன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதில் வித்தியாசமான முகத் தோற்றத்துடன் பகாசூரன் கெட்டப்பில் செல்வராகவன் தோன்றியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை இந்தாண்டின் இறுதிக்குள் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.