இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'என்.ஜி.கே.' விமர்சன ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. இப்படத்தையடுத்து, செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ள செல்வராகவன், அடுத்தகட்டமாக நடிகர் நடிகைகள் தேர்வில் கவனம் செலுத்த உள்ளார்.
இந்த நிலையில், கதை எழுதும் அனுபவம் குறித்து இயக்குனர் செல்வராகவன் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "நாம் எழுதும்போது அந்தக் கதாபாத்திரமாக மாறிவிடுவதைத் தவிர்க்க முடியாது. நிறைய முயற்சியும் பயிற்சியும் அதற்குத் தேவை. முழுமையான கதையை உருவாக்க ஆயிரத்திற்கும் மேலான பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதுவது என் வழக்கம். ஆம். எழுதுவது என்பது கடினமான பணி. நான் மகேஷ், வினோத், கதிர், கொக்கிகுமார், கணேஷ், முத்து, கார்த்திக் சுவாமிநாதனாக மாறினேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.