2017ஆம் ஆண்டு மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் பலரும் திரண்டு போராடினார்கள். அப்போது சில திரை பிரபலங்களும் வந்து கலந்துகொண்டனர். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸும் கலந்துகொண்டார் போராட்டத்தில் முன்னே நின்றார். போராட்டம் முடிவடைவதாக இருந்த கடைசி நாள் அன்று ராகவா லாரன்ஸ் சில அரசியல்வாதிகளை பார்த்ததாக புகைப்படங்கள் வெளியாகின. பின்னர், அன்று போராட்டத்தில் நடந்த கலவரங்களுக்கு ராகவா லாரன்ஸ், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டோர்தான் காரணம் என்ற வகையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு மேடையில் குற்றம் சாட்டினார். அதற்கு ராகவா லாரன்ஸும் தகுந்த பதிலடி அப்போது தந்திருந்தார். இதற்கு பின் இவ்விருவரும் இதுகுறித்து மேடைகளில் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துகொண்டே வந்தனர். இந்நிலையில் இதற்கு தற்போது ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
![seeman](http://image.nakkheeran.in/cdn/farfuture/7GnPqORPUv0vYPlBDFMjWL1LYZFw8TkvIiTH6VmNZBM/1555314880/sites/default/files/inline-images/seeman_36.jpg)
“நீங்கள் என்னைத் தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரிகமாகப் பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல், உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்” என்று லாரன்ஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த சீமான், “லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கும் என் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு ராகவா லாரன்ஸுக்கு விளக்கம் தெரிவித்தார்.