மராத்தி பட உலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சயாஜி ஷிண்டே. கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை படத்தில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்தார். மராத்தி மட்டுமின்றி தனது நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார்.
![sayaj shinde](http://image.nakkheeran.in/cdn/farfuture/PO5Omz8kcOdCXmDgkWQoGg8OhycVVm84v0mjpbBtvNk/1583752368/sites/default/files/inline-images/sayaj-shinde.jpg)
இவர் புனேவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிவடைந்தபின் மாலை 4 மணி அளவில் மும்பைக்கு தன்னுடைய காரில் திரும்பியுள்ளார்.
புனே- மும்பை நெடுஞ்சாலை வந்துக்கொண்டிருக்கும்போது கோத்ராஜ் என்னும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்த புதர்களில் தீ பற்றி எரிவதை பார்த்திருக்கிறார் சயாஜ். உடனடியாக அவர் காரை நிறுத்தி தனது ஆதரவாளர்களுடன் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் 50 மீட்டர் பரப்பளவில் பற்றி எரிந்த தீயை, அங்குள்ள மரத்தின் கிளைகளை உடைத்து தீயின் மீது அடித்து அணைக்க போராடினார். எனினும் தொடர்ந்து கரும்புகை வந்துகொண்டிருந்ததால், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து தீயை முற்றிலும் அணைத்தனர்.
நடிகர் சாயாஜி ஷிண்டே தீயை அணைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இணையவாசிகள் அவரின் இந்த செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.