![Sathyaraj](http://image.nakkheeran.in/cdn/farfuture/EULgFTmyVxOUQxZ63LtgGj_jdpQ69KNutDYSQV5m1vc/1646463690/sites/default/files/inline-images/121_20.jpg)
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், "நாங்கள் அனைவரும் பிரபாஸை டார்லிங் என்றுதான் அழைப்போம். வழக்கமாக பிரபாஸ் படங்களில் கார் பறக்கும், பிரபாஸ் பறப்பார். ஆனால், இந்தப் படத்தில் கப்பல் பறக்கிறது. இந்த விழாவிற்கு ஜேம்ஸ் கேமரூனையே சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கலாம். படத்தில், நாம் நினைக்குறதா நம் மனசு நம்மை ஏமாற்றுது என்று ஒரு வசனம் உள்ளது. ரொம்பவும் பவர்ஃபுல்லான டயலாக் அது. ராதா கிருஷ்ணன் சாரின் உதவி இயக்குநர்களாக ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜென் மாஸ்டர் ஆகியோர் பணியாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நான் காலேஜ் படித்தபோது ரிஷி கபூர் நடித்த பாபி என்ற திரைப்படம் ஒரு வருடம் சென்னையில் ஓடியது. கோயம்புத்தூரில் 100 நாட்கள் ஹவுஸ்ஃபுல். அந்தப் படம் பெற்ற வெற்றியை இந்தப் படமும் பெறும். நான் ஹீரோவாக நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஏ.வி.எம்மில் இருந்து எனக்கு ஒரு பட வாய்ப்பு வந்தது. எஸ்.பி. முத்துராமன் சார் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், கதை இன்னும் முடிவு செய்யப்படாமல் இருந்தது. அப்போது என் நண்பர் கே.பி. ஃ பிலிம்ஸ் பாலுவிடம், அன்பே வா மாதிரி ஒரு படம் எடுக்கச் சொல்லலாமா என்று கேட்டேன். அதற்கு பாலு, அது எம்.ஜி.ஆரின் அழகை மட்டுமே நம்பி எடுத்த படம், அது நமக்கு சரிப்பட்டு வருமா என்றார். அதே மாதிரி பிரபாஸின் அழகுக்காகவே எடுத்த ஒரு படம் என்றால் அது ராதே ஷ்யாம்தான். இது பேன் இந்தியா படம் அல்ல, பேன் உலகப்படம். ஹாலிவுட் படத்திற்கு நிகரான படம் என்று கூறிய காலமெல்லாம் மாறிவிட்டது. நம்முடைய இந்திய சினிமா இன்று மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டது. படத்தில் வரும் கப்பல் காட்சி மிரட்டலாக உள்ளது. அது மாதிரியான மிரட்டலான படம் எவ்வளவு பெரிய வெற்றியடையும் என்பதற்கு டைட்டானிக் உதாரணம். இந்தப் படம் டைட்டானிக்கின் வசூலைத் தாண்டவேண்டும் என்று மனசார வாழ்த்துகிறேன்" எனப் பேசினார்.