![sathyaraj speech in manivannan book release function](http://image.nakkheeran.in/cdn/farfuture/mJmbLzwgVLD8BiC3--gxzRPkdqepXW4R9uDazEGHN4o/1695132462/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202023-09-19%20at%206.57.01%20PM%20%282%29.jpeg)
எழுத்தாளர் ஜீவ பாரதியின், 'இயக்குநர் மணிவண்ணனும் நானும்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார்.
பின்பு மேடையில் பேசிய சத்யராஜ், "புதுவசந்தம் ஷூட்டிங் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்று வந்தது. மணிவண்ணன் சம்பாதித்த பணத்தில் பெரிய தங்க டாலர் வைத்த சங்கிலியை அணிந்துள்ளார். அப்போது, திடீரென ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் வந்து நலம் விசாரித்தார். பின்னர், மணிவண்ணன் சட்டைக்குள் உரிமையுடன் கைவிட்டு தங்கத்தை எடுத்து, 'நல்லா இருக்கீங்களா தோழர்' எனக் கேட்டுள்ளார். பின்பு, என்ன தோழர் இயக்குநராகி சம்பாதித்தவுடன் கொள்கை எல்லாம் விட்டுவிட்டீர்களா என கேட்டார். நான் சொன்னேன், தோழர் அவர் நம்மை குத்திக் காட்டிட்டு போறாரு, கம்யூனிஸ்டா இருந்துட்டு இவ்வளவு பெரிய நகை அணிந்திருக்கிறீர்களே என்று. இது மாதிரி நிறைய நினைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதுமாதிரி ஒருநாள் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்து, என் தங்கைகள் இருவருக்கும் கல்யாணம் வைத்திருக்கிறேன் என தெரிவிக்க சென்றேன். ஒரு முதலமைச்சராக நீங்கள் இருக்கையில் திருமண நிகழ்விற்கு அழைப்பது நல்லது இல்லை. எனவே, நான் உங்களிடம் நிகழ்வு குறித்து தெரிவிக்க வந்தேன். திருமணம் முடிந்த பின் மணமக்களை அழைத்து வருகிறேன் என்றேன். ஆனால், எம்.ஜி.ஆர் இரண்டு திருமணத்திற்கும் வருகை தந்து ஆச்சர்யப்படுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆரின் வாகனத்தில் நானும் அவரும் செல்ல, மக்கள் வழியில் கை அசைத்தனர். எம்.ஜி.ஆர் பின்னிருந்து என்னை கையசைக்க சொல்ல, நானோ 'அய்யோ அவர்கள் உங்களை வரவேற்கிறார்கள்' என சொல்லி ஒரே நகைச்சுவையாக அமைந்தது. அடுத்து, கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் பத்து வித வேடங்கள் போட வேண்டியிருந்தது. ஆனால், சிவாஜி ஏற்கனவே ஒன்பது வேடத்தில் நடித்துவிட்டதால் 9 வேடம் வரை போதும் என முடிவு செய்து எடுத்தோம். அந்த நீதிமன்ற காட்சியெல்லாம் ஒரே நாளில் படம்பிடித்தோம். அப்போது மணிவண்ணன் அப்படிதான், நூறாவது நாள் படமெல்லாம் 18 நாளில் எடுத்தோம். இப்படி இளமைக் காலங்கள் என்ற படத்தில், 7 பாடல்களுக்கு கதை எழுதி படமாக எடுத்தவர் மணிவண்ணன். அவர் வெவ்வேறு விதமான படங்களை குறுகிய காலகட்டங்களில் எடுக்கும் அளவு ஆற்றல் உடையவர்.
இதேபோல் ஜல்லிக்கட்டு படம் படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கு, முந்தைய நாள் ஒரு பேட்டியில் மணிவண்ணனிடம் சிறந்த நடிகர்கள் யார் என கேட்க, 'பாரதிராஜா, பாலச்சந்தர்' என பதிலளித்துள்ளார். அடுத்த நாள் ஷூட்டிங்கில் சிவாஜி, ஒவ்வொரு ஷாட் முடியும் பொழுதும் வந்து 'அய்யா, நீங்க சொன்ன பாலச்சந்தர், பாரதிராஜா மாதிரி நடித்தேனா' எனக் கேட்க ஆரம்பித்துவிட்டார். உண்மையில் நாம் நினைப்பது போல சிவாஜி நிஜ வாழ்கையில் இல்லை. அவர் அவ்வளவு இயல்பாக நகைச்சுவை செய்யக்கூடிய நபர் தான். எனவே, ஜல்லிக்கட்டு படம் ஷூட்டிங் முடியும் வரை அந்த 'பாரதிராஜா, பாலச்சந்தர்' காமெடியை அடிக்கடி சொல்வார். இன்னும் நிறைய நினைவுகள் இருக்கிறது மணிவண்ணனை பற்றி பேசுவதற்கு. புத்தகம் பற்றிய என்னுடைய கருத்துகளை எழுதி அனுப்பவில்லை, வாட்ஸ் அப்பில் ஆடியோவாகத் தான் ஜீவபாரதிக்கு அனுப்பினேன். மொபைல் வந்த பிறகு எழுதும் பழக்கம் அறவே போய்விட்டது. ஜீவ பாரதி எழுதுவதை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து எழுத வேண்டும். கண்ணதாசன் சொல்வது போல, 'நான் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்றார். அவர் ஜீவ பாரதிக்கும் சேர்த்து தான் கூறியுள்ளார். இவரின் பணி மேன்மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்" என்றார்.