தமிழ் சினிமாவில் 'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனான நடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் வடிவேலுவின் காமெடி டிப்ஸ் மற்றும் எம் மகன் படம் குறித்தும் பேசிய பகுதி...
“ஜாலி படம். இயக்குனர் திருமுருகன் என்னை தங்கத்தாம்பாளத்தில் வைத்து தாங்கி தாங்கி வேலை செய்தார். அந்த செட்டில் நான் வைத்ததுதான் சட்டம். நான் என்ன சொன்னாலும் ஓகே மேடம் என்று சொல்லுவார். படம் முழுக்க ஜாலிதான். ஆனால், அந்த படத்தில் நான் பட்ட ஒரே கஷ்டம் என்றால் குழாயடியில் உருளும் காட்சிதான். எனக்கு உடம்பில் மண்ணு, நீர் பட்டாலே பிடிக்காது. என்னிடம் அந்த காட்சியை இயக்குனர் சொன்னபோது நான் செய்யவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் வேண்டுமானாலும் நடிக்கிறேன் என்று வடிவேலு சொல்லிவிட்டு அவர் ரெடியாகிவிட்டார். பின் இயக்குனர் என்னை தனியாக அழைத்துச் சென்று மேடம் நீங்கள் நடிப்பதுபோல அந்த காட்சியை எழுதிவிட்டேன். வேறு யாரு நடித்தாலும் அது சரியாக வராது என்று சொல்லிவிட்டார். அதன்பின் நான் சம்மதித்தேன்.
அந்த காட்சியில் நடிப்பதற்கு வடிவேலு சாரும் டிப்ஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர் என்னமாதிரியான ஜீனியஸ். அவங்களுக்கெல்லாம் ஹூமர் சென்ஸ் உண்டு, எனக்கெல்லாம் ஒன்னும் தெரியாது. எனக்கெல்லாம் காமெடி சுத்தமாக வரவே வராது, நீங்களெல்லாம் எப்படி என் காமெடி பார்த்து சிரிக்கிறீர்கள் என்றுகூட எனக்கு தெரியவில்லை. எனக்கு காமெடி காட்சி என்றாலே பயம் வந்துவிடும். எனக்கு அதெல்லாம் வடிவேலு, திருமுருகன் சொல்லிக்கொடுத்துதான் பண்ணேன். நான் அதை பிடிக்காமல்தான் செய்தேன். இயக்குனர் சொல்கிறார் என்றே செய்தேன்” என்றார்.