சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் 23ஆம் புலிகேசி. இந்த படம் வெளியான சமயத்தில் நல்ல வெற்றியை பெற்றது. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.
![samuthrakani](http://image.nakkheeran.in/cdn/farfuture/dtLqUxQBowKLZJs16oTY1QN3ZJI4uhUkVm282pDk3no/1560237971/sites/default/files/inline-images/samuthrakani.jpg)
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 24ஆம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக கடந்த ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. பழைய படத்தின் அதே கூட்டணியில் உருவாக இருந்த படத்தில் லைகா நிறுவனமும் இணைந்திருந்தது.
ஷூட்டிங் தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சனைகள் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போக, இதன் காரணமாக வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
சமீபத்தில் தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்பு தேவனை கடுமையாக விமர்சித்திருந்தார். இது சினிமாத்துறையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சில திரை பிரபலங்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், “அண்ணன் வடிவேலு பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசியிருப்பது, பெரும் வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. சிம்புவின் க்ரியேட்டிவ், ‘புலிகேசி’ தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி.