![samantha Shaakuntalam and dhanush vaathi to release same date](http://image.nakkheeran.in/cdn/farfuture/OcOX6Uk6dCCRy7RFNmIs_zqLOluvfPKFtcgftooUd8I/1672640512/sites/default/files/inline-images/40_35.jpg)
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாகுந்தலம்'. காளிதாசர் எழுதிய புராணக் கதையான சாகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமந்தா சாகுந்தலையாகவும் தேவ் மோகன் துஷ்யந்தனாகவும் நடித்துள்ளனர். மேலும், அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில், சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் 3டியில் வெளியாகவுள்ளதால் இன்னும் சில மாதங்கள் ஆகும் என தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 17 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமந்தா, அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனால் வருத்தத்தில் இருந்த சமந்தா ரசிகர்கள், விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டு வரும் நிலையில், சமந்தா படம் ரிலீஸாகவுள்ளது அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
சாகுந்தலம் வெளியாகவுள்ள அதே தேதியில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படமும் வெளியாகவுள்ளது. வாத்தி படமும் கடந்த மாதம் வெளியாவதாக அறிவித்து பின்பு பிப்ரவரிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.