![salim khan](http://image.nakkheeran.in/cdn/farfuture/cQd435fe9TxVFiVC_EPf9KPLBDR0ckTklAjtxvIGW90/1592645695/sites/default/files/inline-images/salim-khan-with-salman.jpg)
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு திணிப்பு மற்றும் அதிகாரத்தில் இருக்கும் நடிகர்கள்தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பரிபோனதற்கு சல்மான் குடும்பம்தான் காரணம் என 'தபாங்' முதலாம் பாகத்தின் இயக்குனர் அபினவ் காஷ்யப் நீண்ட பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. அபினவ் காஷ்யப், பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபினவ் காஷ்யப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் தெரிவித்துள்ளார்.
"'தபாங் 2' பணிகளை ஆரம்பித்த காலத்திலிருந்தே எங்களுக்கு அபினவ் உடனான தொடர்பு அறுந்துவிட்டது. தொழில்முறையில் நாங்கள் பிரிந்துவிட்டோம். அவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே அவர் பகிர்ந்திருந்த ஒரு பதிவிற்காக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போதும் எடுக்கப் போகிறோம்" என்று அர்பாஸ் கான் கூறியுள்ளார்.
சல்மான் கானின் தந்தை சலீம் கான், அவரால் முடிந்ததை அவர் செய்யட்டும் என்றும் இதற்குப் பதிலளித்து என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.