![Salman Khan application for gun license](http://image.nakkheeran.in/cdn/farfuture/gOoy_cdpU3jw8Z1lpO2Dd4Qx96Nf76KkHy7gjxieeaM/1658581604/sites/default/files/inline-images/489_3.jpg)
சல்மான் கான் தற்போது 'கபி ஈத் கபி தீபாவளி', 'டைகர் 3' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்திவருகிறார். இதனிடையே கடந்த மாதம் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு ஒரு மர்ம கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், 'சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திப்பீர்கள்' என குறிப்பிட்டு இருந்தது. இது தொடர்பாக பாந்திரா போலீஸ் நிலையத்தில் சல்மான் கான் புகார் அளித்திருந்தார். பின்பு போலிஸாரின் விசாரணையில் இக்கடிதத்தை பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவை கொலை செய்ததாக கூறப்படும் அந்த கும்பல் அனுப்பியிருக்கலாம் என தகவல் வந்தது. இதையடுத்து சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சல்மான் கான் நேற்று (22.07.2022) மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் பன்சல்கரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவரிடம் தான் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார். மேலும் விண்ணப்பித்ததோடு விவேக் பன்சல்கரை சல்மான் கானின் பழைய நண்பர் எனவும் அவர் புதிதாக பொறுப்பேற்றுள்ளதையொட்டி அவருக்கு சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.