![brshewr](http://image.nakkheeran.in/cdn/farfuture/C9qXgtJI4fgqKdzirbmVLR6FqMx0-bSbjpiIt_VFDrU/1611126458/sites/default/files/inline-images/Untitled-1_186.jpg)
‘தபாங் 3’ படத்திற்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'ராதே'. 'வெடரன்' என்ற கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படபிடிப்புகள் முடிந்து, கரோனா காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் 'ராதே' படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ரூ.230 கோடிக்கு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சல்மான் கான் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் படம் ஓடிடியில் வெளியாகிவிடுமோ என்று திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே கலக்கம் ஏற்பட்ட நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று (19.01.2021) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சல்மான் கான்.
அதில்... "அத்தனை திரையரங்க உரிமையாளர்களுக்கும் பதில் சொல்ல நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். இந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய முடிவு. திரையரங்க உரிமையாளர்கள் என்ன மாதிரியான நிதிப் பிரச்சினைகளில் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. 'ராதே' படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலமாக அவர்களுக்கு உதவ நினைக்கிறேன். அதற்குக் கைமாறாக, 'ராதே' படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் மீது உச்சபட்ச அக்கறையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். படம் ஈகைத் திருநாள் அன்று வருவதாக முன்னர் கூறியிருந்தோம். அதன்படி 2021 ஈகைத் திருநாள் அன்று படம் வெளியாகும். 'ராதே' திரைப்படத்தை இந்த வருடம் ஈகைத் திருநாள் அன்று திரையரங்குகளில் பார்த்து ரசியுங்கள். நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என கூறியுள்ளார்.