![sai pallavi request tollywood cinema](http://image.nakkheeran.in/cdn/farfuture/_zTrnwcm5uE_HL8AHZbgH669sI_Qo10gESi9SvCI0z0/1655969343/sites/default/files/inline-images/1026_0.jpg)
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, அதன்பின் மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி பலரைக் கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்திலும், பாவக் கதைகள் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள ’எஸ்.கே 21’படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இதனிடையே சமீபத்தில் சாய் பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்த விரத பருவம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய புஷ்பா பட இயக்குநர் சுகுமார் நடிகை சாய் பல்லவி லேடி பவன் கல்யாண் என்று குறிப்பிட்டார். இதனையடுத்து தெலுங்கு திரையுலகினர் சாய் பல்லவியை லேடி பவர் ஸ்டார் என்று அழைத்தனர்.
இது குறித்து பேசிய சாய் பல்லவி, "இந்த லேடி பவர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம். என்னுடைய பெயருக்கு முன்போ, பின்போ எந்தவிதமான பட்டமும் வேண்டாம். நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம் மட்டும் போதும். தயவு செய்து என்னை அப்படி அழைக்காதீர்கள். இந்த மாதிரியான பட்டங்களால் எந்தவித பயனும் இல்லை" என்று கூறியுள்ளார்.