![S. A. Chandrasekhar](http://image.nakkheeran.in/cdn/farfuture/M2JEfde5ltSBBS6cZ7OWkK13oM809ZEOk_N3VztfwN0/1631874924/sites/default/files/inline-images/20_24.jpg)
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் கடவுள் இல்லை'. இது எஸ்.ஏ.சி இயக்கத்தில் உருவாகியுள்ள 71ஆவது திரைப்படமாகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில், படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், படம் குறித்தும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். எஸ்.ஏ.சிக்கும் அவரது மகன் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக பலரும் கூறிவரும் நிலையில், அது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார். இது குறித்து அவர் பேசுகையில், "விஜய்க்கு எப்படி பெயர் வைத்தேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன். விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் எனக் கூறினேன். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் சிலர் உட்கார்ந்து கொண்டு விஜய்யின் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம். பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டிதான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள்.
மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் .பொய் சொல்லாதீர்கள். தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசாதீர்கள். உடனே அப்பா, பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம், எங்களுக்குள் சண்டைதான். இது எல்லா குடும்பத்திலும் நடப்பதுதான். குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக் கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக் கொள்வார்கள். இது சகஜமானதுதான். விஜய் ரகசியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள். விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய் வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் கூறினார்.