நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் உங்களின் படங்களின் கதைநாயகனின் பெயர் விஜய் என்று தான் அதிகம் வரும், அதன் காரணம் என்ன? அத்தோடு உங்கள் மகன் விஜய் பற்றியும் அவரது முதல் பட வாய்ப்பு பற்றியும் சொல்லுங்கள் என்று நாம் முன் வைத்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...
சினிமா இயக்குநர் ஆவதற்கு முன்பு நிறைய அமிதாப்பச்சன் படங்கள் பார்ப்பேன். அவருடைய படங்களுக்கு எழுதும் எழுத்தாளர் சலீம் தனது கதாநாயகனுக்கு விஜய் என்று பெயர் வைப்பார். இது எனக்கு மனதில் ஆழப்பதிந்து விட்டது. விஜய் என்றால் வெற்றி. விஜயன் என்றால் வெற்றி பெற்றவன் என்று அர்த்தம். அப்பெல்லாம் வயிற்றிலிருக்கும் போதே என்ன குழந்தை என்று சொல்லிடுவாங்க. எனக்கு ஆண் குழந்தை என்றதுமே வயிற்றுக்குள்ளேயே இருக்கும் போது விஜய் என்று பெயர் வைத்தேன். முழு பெயர் ஜோசப் விஜய்.
விஜய் நடித்த முதல் படமான வெற்றி படத்தில் நீதிமன்றக் காட்சியில் நடித்து முடித்த பிறகு மூத்த நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்கள் விஜய்யை தன் கையில் தூக்கி வைத்துக் கொண்டு தன் பையிலிருந்து 500 ரூபாயை எடுத்து விஜய்கிட்ட கொடுத்தார். அதை அவர் தன் பையில் வைத்துக் கொண்டார். 1983-ல் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. ஒரே டேக்கில் அந்த காட்சியை நடித்து முடித்தார் விஜய். அதான் விஜய்க்கு கிடைத்த முதல் பரிசு.
செந்தூரப்பாண்டி படம். கிராமங்கள் தோறும் விஜயகாந்த் அறிமுகமாகியிருந்தார். அதில் விஜய் நடித்ததால் அவரும் பட்டி தொட்டியெங்கும் சென்று சேர்ந்தார். அதன் வழியாக அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.