
ஜி.எம். ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு வெற்றிபெற்ற 'திரௌபதி' படத்தைத் தொடர்ந்து, அதே நிறுவனம் தற்போது தங்கள் இரண்டாவது படமாக ‘ருத்ர தாண்டவம்’ படத்தைத் தயாரித்துள்ளது. மோகன் ஜி இயக்கி, தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
'திரௌபதி' படத்தை வெளியிட்ட 7ஜி ஃபிலிம்ஸ் சிவா, இந்தப் படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், சில கட்ஸ்களுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையையும் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் நாளை (24.08.2021) மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.