![rrr](http://image.nakkheeran.in/cdn/farfuture/xY6Y-8TBUywlYFiVUbYe7KdVKx-M54lM9DWEcg04DCE/1631363881/sites/default/files/inline-images/49_12.jpg)
‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துவரும் இப்படத்திற்குக் கீரவாணி இசையமைக்க, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
2021 பொங்கல் வெளியீட்டைக் குறிவைத்தே ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பணிகளை ராஜமௌலி தொடங்கினார். முன்தயாரிப்பு பணிகள் திட்டமிட்டபடி சுமுகமாக முடிந்து படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இயல்புநிலை திரும்பிய பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, இந்த வருடம் அக்டோபர் 13ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்து, அதற்கேற்ப பணிகளை முடுக்கிவிட்டது.
தற்போது இந்தியாவில் இயல்புநிலை திரும்பத் தொடங்கிவிட்டபோதிலும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனாவின் தாக்கம் நீடித்துவருகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல இந்தியாவிலும் சில மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத சூழல் உள்ளது. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழு, படத்தின் ரிலீஸை மீண்டும் ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாகப் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அக்டோபர் மாதத்திற்குள் இறுதிகட்டப் பணிகள் முடிந்து ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தயாராகிவிடும். ஆனால், படத்தின் ரிலீஸை நாங்கள் தள்ளிவைக்கிறோம். திரையரங்குகள் காலவரையறையற்று மூடப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், புதிய தேதியை எங்களால் அறிவிக்கமுடியாது. உலக சினிமா சந்தை மீண்டும் இயக்கத் தொடங்கும்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை உரியத் தேதியில் விரைந்து வெளியிடுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினரின் இந்த அறிவிப்பு, இந்த வருட ஆயுத பூஜை தினத்தையொட்டி படத்தைத் திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.