தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா நேற்று (28.04.2023) விஜயவாடாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய ரஜினி, "‘விஷன் 2020’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1996 ஆம் ஆண்டில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாத போது அந்த துறை பற்றி புரிந்து கொண்டு ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக மாற்றினார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் ஐதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி" என பேசியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் பேச்சுக்கு ஆந்திர மாநிலம் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியது, "ரஜினிக்கு தெலுங்கு மாநிலங்களில் நடக்கும் அரசியல் குறித்து சரியான புரிதல் இல்லை. சட்டமன்றத்தில் என்.டி.ஆரை அவமதிக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு நடந்து கொண்டார். அது தொடர்பான பதிவு மற்றும் வீடியோ இருக்கிறது. வேண்டுமென்றால் ரஜினிக்கு அனுப்பி வைக்கிறேன்.
ரஜினி நடிப்பின் காரணமாக அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் பேசியது என்.டி.ஆரின் ரசிகர்களுக்கும் அவரின் தொண்டர்களுக்கும் வேதனை அளித்திருக்கும். ஹைதராபாத் வளர்ச்சியடைவதற்கு சந்திரபாபு நாயுடு ஆட்சி காரணம் இல்லை. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, ஏழை மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை அளித்தார். தெலுங்கர்கள் வெளிநாட்டில் பணிபுரிவதற்கு ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி தான் காரணம்.
2003ஆம் ஆண்டுடன் தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்து விட்டது. அதன் பிறகு 20 ஆண்டுகாலம் கடந்த நிலையில் ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு எப்படி அந்த நகரின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்க முடியும். இதை ரஜினி நினைத்துப் பார்க்க வேண்டும்" என்றார்.